மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 100வது நாளை எட்டியுள்ளது. நவம்பர் 26ம் தேதி முதல் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராடி வருகிறார்கள். கடும் குளிர், மழை, என அனைத்தையும் எதிர்கொண்டு,  திக்ரி, காஜிபூர், சிங்கு எல்லைகளில் டிராக்டர்களை வீடுகளாக மாற்றி தங்கி சமைத்து சாப்பிட்டு போராடி வருகின்றனர். 


இதன் இடையில் டிராக்டர் பேரணி, சக்கா ஜாம் என பல கட்ட போராட்டங்களை நடத்தினர். விவசாய சங்கங்களுடன் இதுவரை 11 முறை பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது மத்திய அரசு. ஆனால் அனைத்து கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் தான் முடிந்தது. சட்டங்களில் திருத்தம் மட்டுமே செய்ய முடியும், திரும்ப பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக பேச்சுவார்த்தைகளில் தெரிவித்து விட்டது.


ஆனால் விவசாயிகள், திருத்தங்கள் செய்வதில் எந்த பயனும் இல்லை. விவசாயிகளுக்கு துரோகம் விளைவிக்கும் இந்த சட்டங்களை திரும்ப பெறும் வரை போராடி வருகிறார்கள். 


இதன் இடையில் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக அடையாள போராட்டங்கள் நடைபெற்றது. அமெரிக்க பாப் பாடகி ரிஹானா,  சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் போன்றவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தார்கள்.


இந்நிலையில் 100 வது நாளான இன்று கேஎம்பி ஜிடி சாலை எனப்படும் குண்ட்லி - மானேஸர்-பல்வால் அதிவேக விரைவுச்சாலையை இன்று 5 மணி நேரம் முடக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று விவசாயிகள் உறுதியாக இருக்கிறார்கள்.