தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விமல். களவானி, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். திருச்சி மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட இவர், வரும் சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் மணப்பாறை தொகுதியில் தனது மனைவியை நிற்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.அண்மையில் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து விருப்ப மனுவையும் தம்பதிகள் சகிதமாக கொடுத்தனர். 

இந்நிலையில் நடிகர் விமல் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். அதாவது, நடிகர் விமலிடம் தயாரிப்பாளர் திருநாவுக்கரசு என்பவர் ரூ.50 லட்சம் பணம் கொடுத்ததாகவும், அதை திருப்பி தரவில்லை என்றும் புகார் கொடுத்தார். இந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் விமல் விளக்கம் அளித்துள்ளார். அதாவது என்னை பற்றிய தவறான செய்திகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வந்திருப்பதை பார்த்தேன் அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. என் வளர்ச்சியை பிடிக்காத சிலர் இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் திருநாவுக்கரசு என்பவர் என்மீது இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார். திருநாவுக்கரசுக்கும் எனக்கும் எந்தவித நேரடித் தொடர்போ பணம் பரிமாற்றமோ இல்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் அவர் மீது இது தொடர்பாக மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன். அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பறிப்பதே ஆகும் என்று கூறியிருக்கிறார் விமல்.

இச்செய்தி அறிந்த விமல் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆறுதலாக பதிவு செய்து வருகின்றனர். இன்னும் சிலர் வாகை சூட வா, களவாணி பாணியில் ஒரு படம் பண்ணுங்க என்று கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.