சீனா, பாகிஸ்தானின் உள்ளிட்ட நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நம் இந்திய ராணுவம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று, முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் முன்னெச்சரிக்கையாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய பகுதிக்கு உட்பட்ட லடாக் எல்லையில் இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற பயங்கர மோதலில், இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதில், இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 

இதனையடுத்து, சீனா தரப்பில் பல்வேறு விதங்களில் நெருக்கடிகள் தரப்பட்டன. தொடர்ச்சியாக இந்திய எல்லையில் அவர்கள் அதிக எண்ணிக்கையாலான வீரர்களையும், படைகளையும் குவித்ததால், இந்திய எல்லையில் தொடர்ந்து போர் மேகங்கள் சூழ்ந்திருந்தன.

அதே நேரத்தில், இன்னொரு பக்கம் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறியதாக இந்திய ராணுவம் குற்றம்சாட்டி வந்தது. இது தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் எல்லையிலும் சற்று பதற்றமான சூழல் நிலவி வந்தன.

அத்துடன், இந்தியா - சீனாவுக்கு இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியில் மீண்டும் இரு நாட்டு ராணுவ வீரர்கள் மோதலில் ஈடுபட்டதாகவும், இதில் இரண்டு தரப்பிலும் வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் தொடர்ச்சியாகச்  செய்தி வெளியானது.

இதனையடுத்து, அடுத்தடுத்து நடைபெற்ற ராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சு வார்த்தைக்குப் பிறகு, லடாக் எல்லையில் இந்தியா - சீன படைகளை விலக்கும் நடவடிக்கை கடந்த மாதம் தொடங்கியது. 

“எல்லையில் இருக்கும் பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரை பகுதியில் உள்ள, இரு நாட்டுப் படையினரும் விலகத் தொடங்கியதாக” சீன பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார். “இந்த பகுதிகளில் இருந்து திரும்பிச் செல்லும் வீரர்கள், எல்லையில் ஏற்கனவே இருந்த நிலைகளுக்குச் செல்வார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில், நேற்றைய தினம் தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இதில் காணொலி காட்சி மூலமாக முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் கலந்துகொண்டார். 

அப்போது, இந்த விழாவில் பேசிய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், “ நம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, அளவான போர் திறன்களை உடைய சிறிய படையாக இருந்த நம் நாட்டின் ராணுவம், இன்றைக்கு நவீன போர் கருவிகளை உடைய, மிக வலுவான படையாக மாறி உள்ளது” என்று குறிப்பிட்டார். 

“போர்களின் தன்மைகளில், 20 ஆம் நூற்றாண்டில் பல்வேறு மாற்றங்களை நாம் சந்தித்து உள்ளோம் என்றும், பாதுகாப்பு விவகாரங்களில் பல சவால்களை நாம் சந்தித்து வருகிறோம்” என்றும், அவர் கூறினார். 

அத்துடன், “உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த ராணுவம் சந்தித்து வரும் சவால்களை விட, நம் இந்திய ராணுவம் அதிக அளவிலான சவால்களைச் சந்தித்து வருகிறது” என்றும், அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

குறிப்பாக, “சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, நம் இந்திய ராணுவம் இனி எப்போதும் தயாராக இருக்க வேண்டும்” என்றும், முன்னெச்சரிக்கையாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில், எதிர் காலத்தில் ஆதிக்கம் செலுத்த, சீனா மிக கடுமையான முயற்சிகளில் ஈடுபடும் என்றும், போர் திறன்களின் மாற்றத்தை உள் வாங்கி, அதைத் திறமையாகச் செயல்படுத்திய மற்ற நாடுகளின் படிப்பினைகளை, நாம் தெளிவாகக் கற்க வேண்டும்” என்றும், முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், குறிப்பிட்டுப் பேசினார்.