தென்னிந்திய சினிமாவில் குணசித்திர வேடங்களில் கச்சிதமாக நடிப்பவர் நடிகர் கிஷோர். தமிழில் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘பொல்லாதவன்’ மூலம் அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். அதன்பின் தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றார். இவரின் நடிப்பில் வெளிவந்த ‘ஆடுகளம்’ , ‘வடசென்னை’ , ‘பொன்னியின் செல்வன்’ முக்கிய படங்களாகும். குறிப்பாக கடந்த ஆண்டு இந்திய அளவு வெற்றிபெற்ற ‘காந்தாரா’ படத்தில் வனத்துறை அதிகாரியாக வந்து அசத்தியிருப்பார் கிஷோர்.

 இவர் அவ்வப்போது பல சமூக பிரச்சனைகளை பேசியும் அதுகுறித்த பதிவுகளையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றி வந்துள்ளார். குறிப்பாக மத்திய அரசுக்கு எதிராக பல கருத்துகளை முன்வைத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரின் விதிமுறைகளை மீறியதால் இவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. முடங்கியதற்கு காரணம் நடிகர் கிஷோரின் பதிவு தான் என்று பலர் பதிவிட்டிருந்தனர். இதனையடுத்து ரசிகர்கள், சமூக ஆர்வலர்கள் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான எலன் மஸ்க் கணக்கை டேக் செய்து கேள்விகளை எழுப்ப தொடங்கினார். இந்நிலையில்  இதுகுறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

அதில், “ தேவையற்ற அனுமானங்களை தவிர்க்க இந்த பதிவு, எனது ட்விட்டர்  கணக்கு எனது பதிவினால் முடக்கப்படவில்லை. கடந்த மாதம் 20ம் தேதி அதை யாரோ ஹேக் செய்துள்ளார்கள் என அறிந்து கொண்டேன். இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத்திடம் பேசினேன். அவர்கள் அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். உங்கள் எனது ட்விட்டர் கணக்கை இடைநிறுத்துவது பற்றி தேவையற்ற எண்ணங்களை கைவிடுங்கள். உங்கள் அக்கறைக்கு நன்றி” என்று குறிப்பிட்டிருந்தார்.

 

View this post on Instagram

A post shared by Kishore Kumar Huli (@actorkishore)

 

தேவையற்ற இணைய சண்டைகளையும் அனுமானங்களையும் செய்து வந்த ரசிகர்களையும் அவரை பின் தொடர்பவர்களையும் கிஷோரின் இந்த பதிவு சாந்தபடுத்தியுள்ளது. சமூக ஊடகங்கள் சமீப காலமாக ஹேக் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பல பிரபலங்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குனரும் நடிகருமான இரா.பார்த்திபன் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக ட்வீட் அல்லது ட்விட்டரின் உள்நுழைவு இல்லாத கணக்குகளை நீக்கப்படுவதாக ட்விட்டரின் உரிமையாளர் எலன் மஸ்க் அறிவித்திருந்தார். அவர் குறிப்பிட்டபடி அந்த பட்டியலில்  150 கோடி கணக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதனாலோ பல கணக்குகள் முடங்குவதும் தற்காலிகாமாக நிறுத்தபடுவதுமாக இருந்து வருகிறது

இந்த செய்திக்கு பின் சமீப காலமாக ட்விட்டரில் எந்த பிரபலத்தின் கணக்கு முடங்கினாலும் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரை விமர்சித்து வருவது வாடிக்கையாக உள்ளனர்.