சூப்பர் ஸ்டார் ரஜினி என்றாலே உலகளவில் பலதரப்பு ரசிகர்களாலும் மக்களாலும் போற்றப்பட்டு வரும் ஒரு ஆளுமை எனலாம். அந்த வகையில் ரஜினியை ரசிக்காத நபர்களே இல்லை. ரஜினியின் தோற்றத்தையும், பாவனைகளையும் பின்பற்றாத ஆளே இல்லை. தற்போது உச்சநட்சத்திரம் சொல்லப்படும் நடிகர்களே ரஜினியின் ஸ்டைலை தொடாமல் நடிக்க முடியாது. எந்த வகையிலாவது ரஜினியின் சாயல் அந்த காட்சியில் வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் ரெபரன்ஸ்கள் பல இடங்களில் பயன்படுத்தி கைத்தட்டல் வாங்கிய நட்சத்திரங்களும் இங்கு உண்டு.

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது டிவிட்டர் கணக்கை தொடங்கி 13 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதற்கு ரசிகர்கள் அளித்த வரவேற்புக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தனது ரசிகர்களுக்கு தெரிவித்தார். அதன் பின் #AskSrk என்ற ஹேஷ்டாக் மூலம் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் ரஜினி நடித்து இயக்குனர் நெல்சன் இயக்கிவரும் 'ஜெயிலர்' படத்தின் முதல் பார்வை போஸ்டரை பதிவிட்டு "ரஜினி சார் பற்றி சொல்லுங்கள்" என்று ஷாருக் கானை டேக் செய்து கேட்டுள்ளார். அதற்கு ஷாருக்கான் "பாஸ் மேன்!!" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி ரஜினி ரசிகர்களும் ஷாருக்கான் ரசிகர்களும் இணைந்து அந்த பதிவை வைரலாக்கி வருகின்றனர்.

பாலிவுட்டின் கிங் கானான ஷாருக்கான், ரஜினி ரசிகர் என்று பல மேடைகளில் குறிப்பிட்டதுண்டு.  அதை பல இடங்களில் நிருபித்தும் ரஜினிகாந்த் அவர்களை ஸ்லாகித்தும் வந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக  ஷாருக்கான் நடித்து அதிக பொருட்செலவில் 2011 ல் வெளியான படம் 'ரா ஒன்' அதில்ரஜினிகாந்த் நடித்த  'எந்திரன்' ரோபாவை சிறப்பு தோற்றத்தில் அறிமுகப்படுத்தி ரஜினியை கௌரவப்படுத்தியிருப்பார். மேலும் இதுபோல பல படங்களில் ரஜினி வசனங்கள், ரஜினி போஸ்டர்களை வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

அவர் இன்னும் ஒருபடி மேல் சென்று 2013 ல் இயக்குனர் ரோகித் ஷெட்டி இயக்கி ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்து வெளிவந்த 'சென்னை எக்ஸ்பிரஸ்' திரைப்படத்தின் இறுதியில் ஒரு பாடலை ரஜினிக்கு மரியாதை செலுத்தும் வகையில் வைத்திருப்பார். பிரபல பாடகர் ஹனி சிங் குரலில் உருவாகிய 'லுங்கி டேன்ஸ்' பாடல் வெளியாகி உடனடியாக இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. லுங்கி டான்ஸ் பாடல்  இந்தியா முழுவதும் மொழி வேறுபாடில்லாமல் கொண்டாடி தீர்த்தனர். இன்றும் அந்த பாடல் கேட்காத நிகழ்சிகளோ கொண்டாட்டங்களோ இல்லை. இதன்படி பல ஆண்டுகளாக ரஜினியை புகழ்ந்து வரும் ஷாருக் கான் தென்னிந்திய சினிமா மீதும் தமிழ் நடிகர்கள் மீதும் அலாதி அன்பும் மரியாதையும் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜய் குறித்து 'அவர் இனிமையானவர், அமைதியானவர் சிறந்த இரவு உணவை அளித்து உபசரித்தார்' என்றும் விஜய் சேதுபதி குறித்து 'பிரமாதமானவர்' என்றும் தன்மையான குணத்துடன் ரசிகர்களின் தொடர் கேள்விக்கு பதிலளித்தார். இந்நிலையில் இது தொடர்பான பதில்களை அதிகளவு வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.