சிம்பு நடிப்பில் உருவாகும் 'பத்து தல' படம் குறித்த முக்கிய அப்டேட் பற்றி தயாரிப்பாளர் BOFTA தனஞ்செயன் ட்விட்டரில் பேசியுள்ளார்.

தமிழில் 2006ல் வெளியான 'சில்லுனு ஒரு காதல்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கே.கிருஷ்ணா. சூர்யா கதாநாயகனாக நடித்திருந்த அப்படத்தில் ஜோதிகா மற்றும் பூமிகா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தனர். சூர்யாவின் கல்லூரிக்கால காதல் மற்றும் திருமணத்திற்குப் பிறகான காதல் ஆகிய பக்கங்களை சுவாரசியமாகப் பேசியிருந்த இப்படம், விமர்சன மற்றும் வசூல் ரீதியில் நல்ல வேற்பைப் பெற்றது.

இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக இதன் இசையைக் கூறலாம். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் 'முன்பே வா', 'சில்லுனு ஒரு காதல்', 'நியூயார்க் நகரம்', 'அம்மி மிதிச்சாச்சு' உள்ளிட்ட பாடல்கள் இன்றும் இசை ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடல்கள்.

இதைத்தொடர்ந்து அவரது இயக்கத்தில் 'நெடுஞ்சாலை' திரைப்படம் வெளியானது. ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷிவதா நடித்திருந்தார். இப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற அளவுக்கு படம் பேசப்படவில்லை. இதன்பின் அவர் தமிழில் படங்கள் எதுவும் இயக்காமல் இருந்தார். தெலுங்கில் மட்டும் அவரது இயக்கத்தில் 'ஹிப்பி' என்ற படம் வெளியானது.

இந்நிலையில், நடிகர் சிம்புவை கதாநாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை கிருஷ்ணா இயக்கவிருப்பதாகத் தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து பத்து தல படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தைத் தயாரிப்பதாகவும், கௌதம் கார்த்திக், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. முக்கிய அறிவிப்பாக 'சில்லுனு ஒரு காதல்' திரைப்படத்தைத் தொடர்ந்து 'பத்து தல' படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்ற அறிவிப்பும் வெளியானது.அண்மையில் இதில் நடித்துள்ள ரெடின் கிங்ஸ்லி இப்படத்திற்கான தனது டப்பிங் பணிகள் முடிந்ததாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், 'பத்து தல' படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர் BOFTA தனஞ்செயன் ட்விட்டரில் ரசிகர்களுடன் பேசும்போது தெரிவித்துள்ளது ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டரில் 'ட்விட்டர் ஸ்பேஸ்' தளத்தில் பேசியுள்ள BOFTA தனஞ்செயன் தமிழ் சினிமா குறித்த முக்கிய அப்டேட்கள் பற்றி பேசினார். அதில் அவர் 'பத்து தல' படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவிருப்பதாகவும், பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் முதல் வாரத்தில் இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் சிலம்பரசன் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதையடுத்து 'பத்து தல' படத்தின் முதல் பாடல் எப்பொழுது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் அதிகரித்துள்ளது.