சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர் H.வினோத் தனது இரண்டாவது படமாக இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் கவனத்தையும் பெற்றது.

இதனை அடுத்து தனது மூன்றாவது படத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவரான அஜித்குமார் உடன் இணைந்த H.வினோத் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பின்க் படத்தின் தமிழ் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கினார். தொடர்ந்து மீண்டும் அஜித் குமாருடன் இரண்டாவது முறை இணைந்த H.வினோத் இயக்கத்தில் கடைசியாக வந்த வலிமை திரைப்படம் பக்கா ஆக்சன் திரைப்படமாக பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இந்த வெற்றி கூட்டணியில் மூன்றாவது படமாக தற்போது தயாராகி இருக்கிறது துணிவு. போனி கபூர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட நாளை ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. அஜித் குமாரின் துணிவு திரைப்படத்தோடு சேர்ந்து மற்றொரு உச்ச நட்சத்திர நடிகரான தளபதி விஜயின் வாரிசு திரைப்படமும் ரிலீஸ் ஆவதால் இந்த பொங்கலில் கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. 

படத்தின் காட்சியமைப்புகள் ஒரு வங்கியில் கொள்ளை நடைபெறும் வகையிலும், டைட்டில் கூட ரூபாய் நோட்டு ஸ்டைலிலும், இன்னும் நிறைய விஷயங்கள் பணத்தை குறிப்பிடும் வகையிலும் துணிவு படத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்த துணிவு படக்குழுவினர் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

அந்த வகையில்,  இயக்குனர் H.வினோத் அவர்களிடம் துணிவு திரைப்படம் பண மதிப்பீடு பற்றிய படமா..? என கேட்டபோது, “பணத்தை மதிப்பீடு செய்யும் படம் அல்ல.. இது ஒரு சீரியஸான படம் அல்ல. எல்லா விஷயங்களையும் சுவாரசியமாகவும் ஜாலியாகவும் சொல்ல முயற்சித்து இருக்கிறோம். அதில் பணத்தை கையாள்வது ஒரு பகுதியாக வருகிறது” என பதிலளித்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ…