கொரோனா வைரஸ் நோய்த் தொற்று மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்த இந்த சூழலில் அரசின் நடவடிக்கைகள் மட்டும் மக்களின் நிலையை மாற்றிவிட முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. தன்னார்வ அமைப்புகள் பலர் தாமாக முன் வந்து தங்களால் இயன்ற பணிகளை செய்து வருகிறது. வேலையின்றி, உணவின்றி தவிக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது போன்ற கடமைகளை செய்து வருகின்றன.

தற்போது இந்த பணிகளை கமல்ஹாசன் முன்னெடுத்துள்ளார். இதுவரை அடையாளம் ஏதுவுமின்றி செயல்படுத்தி வரப்பட்ட இந்த பணிகளுக்கு இப்போது பிரத்தியேகமாக ஒரு இணைய முகவரியை உருவாக்கியுள்ளார். குறிப்பிட்ட இணையப் பக்கத்திற்கு நாமே தீர்வு எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த இணைய முகவரியை இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ் அறிமுகப்படுத்தினார்.

இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாமே தீர்வு, என்ற இயக்கத்தை உருவாக்கி மக்களுக்கு உதவும் முயற்சியை செய்து வருகிறோம். இப்போது இதற்காக இணையப் பக்கம் ஒன்றை உருவாக்கி உள்ளோம். அதன்படி, www.naametheervu.org இணையப் பக்கத்தின் வழியாக உதவி தேவைப்படும் மக்கள் எங்களுக்குத் தெரியப்படுத்தலாம். அவர்களுக்கு எந்த விதமான தேவைகள் இருந்தாலும், அதைப் பூர்த்தி செய்ய நாங்கள் பணிகளை மேற்கொள்வோம். எங்களுடன் இணைந்து உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவிகள் செய்யத் தன்னார்வலர்களும் வரவேற்கப்படுகிறார்கள். அவர்களும் தங்களால் இயன்ற வழியில் உதவிகளை வழங்கலாம் எனக் கூறியுள்ளார். இந்த ஆப் குறித்து ஜி. வி பிரகாஷ் வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

பல நற்செயல்கள் செய்து வரும் ஜிவி பிரகாஷ், சர்வதேச போதை ஒழிப்பு நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் ஜெயில் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அபர்நிதி, ராதிகா, ரோபோ ஷங்கர், யோகிபாபு போன்றோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் படத்தின் முதல் பாடலான காத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வரிசையாக படங்களில் நடித்து வரும் ஜிவி பிரகாஷ், சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று, விஜய் இயக்கத்தில் தலைவி மற்றும் தனுஷ் நடிக்கவிருக்கும் D43 படத்திற்கு இசையமைத்து வருகிறார்.