“தைரியமானவர்களே அமைதியை விரும்புவார்கள்” என்று, லடாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி வீர உரை நிகழ்த்தினார்.

இந்தியா எல்லையான லடாக் பகுதியில், சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில் கடந்த ஜுன் மாதம் 15 ஆம் தேதி இருநாட்டு ராணுவ வீரர்கள் இடையே கடும் மோதல் வெடித்தது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து பல ஆயிரம் மீட்டர் உயரத்தில் பூஜ்ஜிய டிகிரி வெப்ப நிலையில் இந்திய வீரர்கள் போராடியதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, 1967 ஆம் ஆண்டுக்குப் பிறகு, எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா வீரர்கள் இடையே கடும் சண்டை நடந்ததால், அங்கு தற்போது பதற்றமான சூழல் நிலவியது. இதனைத் தொடர்ந்து, லடாக் பகுதியில் சீனா தனது ராணுவத்தைக் குவித்தது. இதற்குப் பதிலடியாக இந்தியாவும் தனது ராணுவத்தைக் குவித்தது. இதனால், இந்திய - சீன எல்லையில் போர் பதற்றம் உருவானது.

இதன் காரணமாக, இருநாடுகளும் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காண்பதாக அறிவித்த நிலையில், அடுத்தடுத்து நடந்த எந்த பேச்சு வார்த்தையிலும் உடன் பாடு ஏற்பட்டு, படைகளை விலக்கிக் கொள்ள இரு நாடுகளும் ஒப்புதல் அளித்தன. இதனையடுத்து, எல்லையில் நிறுத்தப்பட்டு இருந்த இரு நாட்டுப் படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டது. 

எனினும், இந்திய எல்லைக்கு உட்பட்ட ராஜஸ்தான் எல்லை உட்பட சீனா, இந்தியாவைச் சுற்றி வளைப்பதாகவும், இந்திய எல்லையில் சீனா அத்துமீறிப் பல கட்டடங்களைக் கட்டி வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. மேலும், எல்லையில் சீன ராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர் என்றும், அவர்களது பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்கள் அந்த பகுதியின் எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் புகைப்பட அதரங்களும் வெளியானது.

இப்படிப்பட்ட பதற்றமான சூழலில், பாதுகாப்பு துரை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே ஆகியோர், லே பகுதியில் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள இருந்தனர். ஆனால், அது நேற்று மாலை திடீரென்று ஒத்தி வைக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டது. இப்படி ஒரு பதற்றமும், சீனாவுடன் மோதல் போக்கு வலுத்து வரும் இந்த இக்கட்டான சூழல் நிலையில், லடாக் எல்லையில் பிரதமர் மோடி, திடீரென்று இன்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் முப்படை தலைமை தளபதி பிபன் ராவத்தும் பிரதமர் உடன் சென்றார்.

அப்போது, இந்தியாவின் ராணுவ பாதுகாப்பு, வான்வெளி பாதுகாப்பு ஆகியவற்றை ஹெலிகாப்டர் மூலமாகப் பிரதமர் மோடி ஆய்வு செய்தார். இதனையடுத்து, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் போது, “இந்திய - சீன எல்லையில் உள்ள பாங்காங் டிஸோ ஏரிக்கு ஆயுதங்கள் நிரப்பப்பட்ட அதிவேக இடை மறித்துத் தாக்கும் படகுகளை அனுப்புவது” குறித்தும் ஆலோசிக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், லடாக் எல்லையில் சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலின் போது காயம் அடைந்த வீரர்களைப் பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதாகவும் தெரிகிறது.  

முன் அறிவிப்பின்றி அதிரடி ஆய்வில் ஈடுபட்டார் பிரதமர் நரேந்திர மோடி, திடீரென்று ராணுவ வீரர்கள் மத்தியில் எழுச்சி உரை ஆற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “நாட்டை பாதுகாக்க உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு, வீர அஞ்சலி” செலுத்தினார். 

அதன் பின், “நமது ராணுவ வீரர்களால் தான் மக்கள் நிம்மதியாக உள்ளனர் என்றும், இந்திய ராணுவ வீரர்களின் மன உறுதி மலையைப் போலப் பலமாக இருக்கிறது” என்றும் பெருமிதத்தோடு குறிப்பிட்டார். 

“நாடு உடைக்க முடியாத நம்பிக்கையை தற்போது கொண்டிருப்பதாக” குறிப்பிட்ட பிரதமர் மோடி, “இந்திய வீரர்களின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதைக் காட்டி உள்ளதாகவும்” கூறினார். 

மேலும், “இந்திய வீரர்களின் துணிச்சல் மற்றும் வீரம் பற்றிய கதைகள் நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலிப்பதாகவும்” பிரதமர் மோடி வீர வரை நிகழ்த்தினார். 

குறிப்பாக, திருக்குறளை மேற்கொள் காட்டி லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “மலையின் சிகரங்களை விட இந்திய வீரர்களின் துணிச்சல் மிகவும் உயரமானது” என்றும் எழுச்சி உரை ஆற்றினார்.

“நாம் புல்லாங் குழல் வாசிக்கும் கிருஷ்ணர்கள் தான், அதே வேளையில் சுதர்சன சக்கரத்தையும் வைத்திருக்கிறோம்” என்றும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

“நாட்டின் நிலப்பரப்பை அதிகரிக்கப் பேராசையுடன் செயல்பட்டோர் எப்போதும் வீழ்ச்சிதான் அடைந்துள்ளனர் என்றும், தைரியமானவர்களே அமைதியை விரும்புவார்கள்” என்றும், பிரதமர் மோடி வீர உரையில் தெரிவித்தார். 

“கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்குச் சொந்தமானது என்பதை உறுதியுடன் கூறுகிறேன்” என்று ஆவேசமாகப் பேசிய பிரதமர் மோடி, “நாடு தற்போது உடைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருக்கிறது” என்றும் சூளுரைத்தார். 

இதனிடையே “இந்தியாவும் - சீனாவும் ராணுவ மற்றும் தூதரக வழிகளில் பதற்றமான சூழலைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த கட்டத்தில் நிலைமையை மோசமாக்கக் கூடிய எந்தவொரு செயலிலும் எந்த தரப்பும் ஈடுபடக் கூடாது” என்று, பிரதமர் மோடியின் லடாக் பயணம் குறித்து சீன வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.