கொரோனா லாக்டவுன் காலத்தில் மக்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளார்கள். இதனால் அனைவருக்கும் மின்சாரக் கட்டணம் எவ்வளவு வருமோ என்ற அச்சம் ஆரம்பத்திலிருந்தே இருந்தது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலால் மின்சாரக் கணக்குகள் எடுக்க முடியாத காரணத்தால் சில வழிமுறைகள் மூலமாக அனைவரிடமும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தனது வீட்டின் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு குறித்து நடிகர் பிரசன்னா சில தினங்களுக்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் பதிலளித்தது. இதைத்தொடர்ந்து பல திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பாக தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். 

இந்நிலையில் இயக்குனர் சேரன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பேசியுள்ளார். அதில், தமிழகம் முழுவதும் மின்வாரியத்துறையின் செயல்பாடுகளில் ஒரு தெளிவின்மை தென்படுகிறது. ஒவ்வொரு மாதத்திற்கான மின்கட்டணம் இதுவரை மாதாமாதம் கட்டிய தொகையிலிருந்து இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது. ( கிராமங்களில் இருப்பவர்களுக்கும்)  அதற்கான காரணம் சொல்லப்படவில்லை.

இதுபோன்ற காலக்கட்டங்களில் மக்களுக்கு சலுகையோடு செயல்படவேண்டிய நிர்வாகம் இப்படி அதிகப்படியாக வசூலிக்க நினைப்பது கேள்வியை எழுப்புகிறது. இதை எங்கே எப்படி கேட்பது என்று தெரியாத அப்பாவி மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.. அந்த துறை சார்ந்த மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கவனிப்பார்களாக. 

வேலையின்றி வீட்டிற்கு உணவிற்கு தேவையான பணம் சம்பாதிக்கவே கஷ்டப்படும் சூழலில் இது போன்ற விசயங்கள் ஏழைகளை மிரட்டுகிறது.. வீட்டுக்கு வாடகையே கட்டமுடியாதவர்கள் எங்கிருந்து மின்சார கட்டணம் இரண்டு மூன்று மடங்காக கட்டமுடியும்.. இதுபோன்ற நேரங்களில் தளர்வு அளிக்கவேண்டும் அரசு என்று பதிவு செய்துள்ளார். 

பிரபலங்கள் தவிர்த்து சாமானிய மக்களும் இந்த கொரோனா நேரத்தில் பெரிதும் அவதி படுகின்றனர். பல வடிவங்களில் பிரச்சனைகள் தோன்றுவதால், இயல்பு வாழ்க்கை திரும்பாமல் உள்ளனர். ஏன் பலரும் உணவிற்கு வழியின்றி, வேலையின்றி, வீட்டு வாடகை கூட செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இப்படிபட்ட நேரத்தில் மின்கட்டண உயர்வை கண்டு பீதியில் உள்ளனர் மக்கள். இந்த நேரத்தில் அரசு மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.