அறந்தாங்கி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்திய பிரபலங்கள் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த நாகூரான் என்பவரின் 7 வயது மகள் ஜெயபிரியா என்ற சிறுமி, நேற்று முன் தினம், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருக்கும் போது மாயமானார். இரவு வெகு நேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு வராததால், அந்த பகுதியில் உள்ள உறவினர்கள் வீடுகள், பொது இடங்கள் என அந்த பகுதி முழுவதும் தேடிக் கிடைக்காத நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள கிளவிதாம் ஊரணி பகுதியில், ஆள் நடமாட்டம் இல்லாத கருவேலமரங்கள் அடர்ந்த கண்மாய் கரை உள்ள கொடிகள் அடர்ந்த பகுதியில், மாயமான சிறுமி ஜெயபிரியா, உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து விரைந்து வந்த போலீசார், சிறுமியை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரு பக்கம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், 7 வயது சிறுமி மண்டையில் கடுமையாகத் தாக்கப்பட்டு, உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது. அத்துடன், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டே படுகொலை செய்யப்பட்டதாகவும், அந்த பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, சிறுமியின் வீடு அமைந்துள்ள ஏம்பல் பகுதியைச் சேர்ந்த 27 வயதான ராஜேஷ் என்பவரைச் சந்தேகத்தின் பேரில், போலீசார் தொடக்கத்தில் லேசாக விசாரித்துள்ளனர். ஆனால், அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் சொல்லி இருக்கிறார்.  

இதனால், சந்தேகம் அடைந்த போலீசார், அந்த இளைஞரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று, தீவிரமாக விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், “சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போது, சிறுமி கத்தி கூச்சலிட்டதாகவும், அவரை வெளியே விட்டால் தன்னைப் பற்றி புகார் கூறி, என்னை மாட்டி விட்டுவிடுவார் என்ற பயத்திலேயே, அடித்துக் கொலை செய்ததாகவும்” அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், ராஜேஷை கைது செய்து, சிறையில் அடைத்தனர். 

மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இந்த வழக்கில், அந்த பகுதியைச் சேர்ந்த வேறு யாருக்கேனும் இதில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஈவு இறக்கம் இன்றி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 7 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது சம்பவம், தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அறந்தாங்கி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து விசாரணை துவங்கியுள்ளது.

மேலும், அறந்தாங்கி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இந்தியாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

அதன்படி, இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தனது கண்டன பதிவில், “செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க? உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம். நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல. ரொம்ப கஷ்டமா இருக்குயா” என்று ஹர்பஜன் சிங் வேதனையோடு பதிவிட்டுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத், “பயம் உண்டாக்கினால் மட்டுமே மேலும் இது போன்று ஒரு சம்பவம் நடக்காமல் தடுக்க முடியும். மரண தண்டனையே அதற்குத் தீர்வு” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனத்தை அவர் பதிவு செய்து இருக்கிறார். 
 
நடிகை வரலட்சுமி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கண்டன பதிவில், “மீண்டும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நாம் அனைவரும் கொரோனா வந்து சாவதில் தவறில்லை. கடவுளின் பார்வையில் நாம் அனைவருமே வாழத் தகுதியற்றவர்கள்” என்று தனது கண்டனத்தை ஆவேசமாக வரலட்சுமி சரத்குமார் பதிவு செய்துள்ளார்.

திமுக எம்.பி. கனிமொழி பதிவு செய்துள்ள கண்டன பதிவில், பெண்கள் - சிறுவர்கள் மீதான பாலியல் குற்றங்கள் வன்கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும் என்றும், அறந்தாங்கியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது என்றும், இந்த கொடுஞ் செயலில் ஈடுபட்டவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்” என்றும் கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.