சாத்தான்குளம் லாக்கப் டெத்  விவகாரத்தில் தேடப்பட்ட முத்துராஜ் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், முத்துராஜுக்கு ஜூலை 17 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படார். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் இவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஊரடங்கு விதி முறைகளை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி, இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், தந்தை - மகன் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்த போலீசார், அவர்களை கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். சிறையில் அடைத்த அன்று இரவே பென்னிக்சுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. மறுநாள் காலை தந்தை ஜெயராஜூம் உயிரிழந்துள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டது.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் அடுத்தடுத்து சிறையிலேயே உயிரிழந்ததால், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதனால், கடும் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி வியாபாரிகள், ஊர் மக்கள் அனைவரும், சாத்தான் குளத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும் - மகனும் உயிரிழந்த விவகாரத்தில், காவல் நிலையத்தில் அவர்கள் இருவருக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இருவரின் ஆசன வாயில் போலீசார் லத்தியை உள்ளே விட்டு கடும் சித்திரவதை செய்து கொடுமைப் படுத்தியதாவதாகவும், ஜெயராஜ் - பென்னிக்ஸ் உறவினர்கள் போலீசார் மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

இந்த செய்தி, உலகம் முழுவதும் வேகமாகப் பரவியது. இதனால், மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கு விசாரணை செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக சாத்தான் குளம் காவல் நிலையத்தில் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் நேற்று முன் தினம் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின் போது, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டி.எஸ்.பி. பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும், வழக்கு ஆவணங்களைத் தர மறுத்ததாகவும் கூறி நீதித்துறை நடுவர் பாரதிதாசன், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு இமெயில் மூலம் புகார் அளித்தார். இதனையடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பின்னர், வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான் குளம் காவல் நிலையம் வந்த நிலையில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு எடுத்து வழக்குப் பதிவு செய்தது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக சாத்தான்குளம் லாக்கப் டெத் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட போலீசார் மீது நேற்று முன் தினம் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, லாக்கப் டெத் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட சாத்தான்குளம் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், என 2 போலீசாரும் ஒருவர் பின் ஒருவராக நள்ளிரவில் போலீசார் கைது செய்யப்பட்டனர். மேலும், எஸ்.ஐ. ரகு கணேஷ், காவலர் முத்துராஜ் ஆகியோர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருக்கும் அவர்களையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், 5 வது நபராக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சிபிசிஐடி போலீசார் நேற்ற அதிகாலையில் கைது செய்தனர். 

மேலும் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன் 3 பேரிடமும் நேற்று சுமார் 15 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதனால், போலீஸ் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு, 3 பேரும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதி ஹேமா விசாரணை நடத்தினார். பின்னர், சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 போலீசாரையும், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். அத்துடன், அவர்களைத் தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைக்குமாறு நீதிபதி ஹேமா உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். நீதிபதியின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, 3 போலீசாரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அத்துடன், இந்த வழக்கு விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஜ.டி. போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதாசனுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.  

அதன் தொடர்ச்சியாக, சாத்தான் குளம் லாக்கப் டெத் விவகாரத்தில் தலைமை காவலர் முத்துராஜ், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர், அவரின் சொந்த ஊரில் முத்துராஜ் பதுங்கி இருந்த நிலையில், சி.பி.சி.ஜ.டி. போலீசார் நள்ளிரவில் அவரை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். அத்துடன், கைது செய்யப்பட்ட முத்துராஜுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் பிறகு, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி முன் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து, தந்தை - மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜை, ஜூலை 17 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ஹேமா, அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, நீதிமன்ற காவலில் முத்துராஜ், சிறையில் அடைக்கப்படார். 
 
மேலும், சாத்தான் குளம் தந்தை - மகன் கைதை நேரில் பார்த்த பொது மக்களிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேரில் பார்த்த சாட்சிகளை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தந்தை - மகன் கைதாகும் போது, பணியில் இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினரிடமும் 2 வது நாளாக விசாரணை நடத்தபட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, சாத்தான் குளம் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளியை தாக்கிய புகாரில் தூத்துக்குடி எஸ்.பி. பதிலளிக்க மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மாற்றுத்திறனாளியை எஸ்.ஐ.க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் தாக்கியதாக டிசம்பர் 3 இயக்கம் புகார் அளித்துள்ளது. இதனால், எஸ்.ஐ.க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.