தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது, மக்களை கடும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், நாள் தோறும் கொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்பும், இறப்பு விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

குறிப்பாக, கடந்த ஒரு வார காலமாக 3500 க்கும் மேல் கொரோனா பாதிப்பு பதிவாகி வந்த நிலையில், நேற்று ஒரே அடியாக உயர்ந்து 4 ஆயிரத்தை தாண்டி பரவிய கொரோனா வைரஸ். இதனால், நேற்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98,392 ஆக இருந்தது. தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி பதிவானது.  

அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரித்துள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.   

அதேபோல், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று ஒரே நாளில் 64 பேர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், சுகாதாரத் துறை கூறியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் கொரோனாவால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,321 ல் இருந்து இன்று 1,385 ஆக அதிகரித்துள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.   

முக்கியமாக சென்னையில் இன்று மட்டும் 2,082 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 64,689 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சென்னையில் கொரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தோரின் 

எண்ணிக்கை 996 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அத்துடன், சென்னையில் தற்போது வரை கொரோனாவுக்கு சுமார் 23 ஆயிரத்து 581 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனவில் இருந்து சென்னையில் மட்டும் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை தற்போது 40 ஆயிரத்து 111 ஆக அதிகரித்துள்ளது.

மதுரையில் இன்று மேலும் 287 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அந்த மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,423 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கொரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. 

தேனி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 927 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பார்க்கும்போது..

சென்னை - 2,082
செங்கல்பட்டு - 330
மதுரை - 287
திருவள்ளூர் - 172
தி.மலை - 151
வேலூர் - 145
தேனி - 126
காஞ்சிபுரம் - 121
சேலம் - 99
ராணிப்பேட்டை - 90
க.குறிச்சி - 85
ராமநாதபுரம் - 73
விருதுநகர் - 65
சிவகங்கை - 53
கன்னியாகுமரி - 53

என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று இன்று பரவி உள்ளது.

அதேபோல், தமிழகம் முழுவதும் இன்று 2357 பேர், கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் 
கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை தற்போது 58 ஆயிரத்து 378 ஆக உயர்ந்துள்ளது

குறிப்பாக, தமிழகத்தில் முதல் 5 ஆயிரம் கொரோனா பாதிப்பை கடக்க 25 நாட்கள் ஆன நிலையில், அடுத்த 5 ஆயிரம் பாதிப்புகள் அடுத்த 9 நாட்களில் பதிவானது. அத்துடன், அடுத்த 13 நாட்களில் 10 ஆயிரம் பாதிப்பு எண்ணிக்கையில் இருந்து 20 ஆயிரம் பாதிப்பு எண்ணிக்கையாக அதிகரித்தது.

குறிப்பாக, ஜூன் 30 ஆம் தேதி 90167 கொரோனா பாதிப்புகள் தமிழகத்தில் இருந்த நிலையில், அடுத்த 3 நாட்களில் மேலும் 10 ஆயிரம் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து, தற்போது ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

அதே நேரத்தில் தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில், இந்திய அளவில் தமிழ்நாடு தற்போது 2 வது இடத்தில் உள்ளது. அந்த பட்டியலில் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது.