உருவ கேலி செய்யப்பட்ட தமிழ் நடிகனாக எண்ணற்ற எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த நடிகர் தனுஷ் தன்மீது பாய்ந்த அத்தனை எதிர்மறை அம்புகளையும் ஏணிப்படிகளாக மாற்றி தற்போது உலக சினிமாவில் நடிக்கும் தமிழனாக உயர்ந்திருக்கிறார்.

துள்ளுவதோ இளமை படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதையை கண்டேன், புதுப்பேட்டை திருவிளையாடல் ஆரம்பம் என தமிழ் சினிமாவின் ஒரு நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட நடிகர் தனுஷ் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்த பொல்லாதவன் திரைப்படத்திற்கு பிறகு முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் நுழைந்தார்.

இதனையடுத்து யாரடி நீ மோகினி படிக்காதவன் என கமர்சியல் ஹிட்டடித்த தனுஷ் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்த ஆடுகளம் திரைப்படத்தில் வர்த்தக ரீதியான வெற்றியை பெற்றதோடு சிறந்த நடிகருக்கான முதல் தேசிய விருதையும் பெற்றார்.

பின்னர் ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகராகவும் தனது பயணத்தை தொடர்ந்த நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர் & பாடலாசிரியர் என ரசிகர்களை மகிழ்விக்க தொடங்கினார். மேலும் தனது WUNDERBAR FILMS எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி தயாரிப்பாளராகவும் சிறந்த படைப்புகளை வழங்கி வருகிறார்.

தற்போது மீண்டும் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம், தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் தனுஷ், ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் பட இயக்குனர்கள் ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் தி க்ரே மேன் படத்திலும் நடித்துள்ளார். இப்படங்கள் இந்த ஆண்டு ரசிகர்களுக்கு விருந்தாக அடுத்தடுத்து வெளிவர உள்ளன.

இந்நிலையில் இன்று (மே-10) நடிகர் தனுஷ் தன் திரைப்பயணத்தில் தனுஷ் 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். தனுஷின் 20 ஆண்டுகால திரை பயணத்திற்கு ரசிகர்களும் முன்னணி திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகர் தனுஷ் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

அனைவருக்கும் வணக்கம்,

திரையுலகில் என் திரைப்பயணத்தை தொடங்கி 2 தசாப்தங்கள் நிறைவு செய்துள்ளேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. துள்ளுவதோ இளமை ஆரம்பித்த சமயத்தில் இவ்வளவு தூரம் வருவேன் என கனவு கூட கண்டதில்லை. கடவுள் கருணை மிக்கவர்.

தொடர்ந்து என் மீது அன்பும் ஆதரவும் காட்டிய எனது ரசிகர்களுக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது. நீங்கள் தான் என் பலம்.

என் மீது அளவுகடந்த அன்பைப் பொழிந்த அத்தனை சினிமா காதலர்களுக்கும் நன்றிகள்.

அனைத்து பத்திரிக்கை, தொலைக்காட்சி, ஊடகம் மற்றும் சமூக வலைதள ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி.

நான் பணிபுரிந்த அனைத்து இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், கேமராவுக்கு பின்னால் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள், அற்புதமான சக நடிகர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

எனது அண்ணன் & குரு செல்வராகவன் அவர்களுக்கு நன்றி!! எதற்காக என்பது உங்களுக்கே தெரியும்.

எனக்குள் இருக்கும் நடிகனை கண்டுபிடித்த என் தந்தை கஸ்தூரி ராஜா அவர்களுக்கு நன்றி

இறுதியாக  ஒவ்வொரு நாளும் எனக்காக பிரார்த்தனை செய்து என்னை இத்தனை தூரம் பாதுகாப்பாக அழைத்துவந்த என் தாயாருக்கு நன்றி.

எண்ணம் போல் வாழ்க்கை

அன்பை பரப்புவோம்

ஓம் நமசிவாய

என பதிவிட்டுள்ளார் நடிகர் தனுஷின் அறிக்கை இதோ…