தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராக ஜொலிக்கும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தமிழில் அஜித்குமார் நடித்த வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக தயாராகிவரும் போலா ஷங்கர் படத்தில் தற்போது நடித்து வருகிறார். அடுத்தாண்டு 2023 ஏப்ரல் 14ஆம் தேதி போல ஷங்கர் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர்கள் பாபி மற்றும் வெங்கி குடுமலா இயக்கத்தில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கவுள்ள சிரஞ்சீவி, மேலும் புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடிகை ராதிகா சரத்குமார் தயாரிப்பில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த வரிசையில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துவரும் திரைப்படம் காட்ஃபாதர். மலையாளத்தில் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக தயாராகி வரும் காட்ஃபாதர் திரைப்படத்தை கோனிடெல்லா புரோடக்சன் கம்பனி மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

சிரஞ்சீவியுடன் இணைந்து நயன்தாரா, சத்யதேவ் காஞ்சர்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் காட்ஃபாதர் திரைப்படத்தில் முக்கியமான கௌரவ கதாபாத்திரத்தில் நடிகர் சல்மான் கான் நடித்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவில் S.தமன் இசையமைக்கும் காட்ஃபாதர் படத்தில் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். 

இந்நிலையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 21ஆம் தேதியான இன்று காட்ஃபாதர் திரைப்படத்தின் டீசர் வெளியானது. பக்கா மாஸான காட்ஃபாதர் டீசர் இதோ…