தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் அருண்விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படம் ஓ மை டாக். அருண் விஜய்யுடன் இணைந்து அவரது மகன் அர்னவ் மற்றும் அவரது தந்தை விஜயகுமார் என மூவரும் இணைந்து நடித்துள்ள ஓ மை டாக் திரைப்படம் வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ளது.

தொடர்ந்து அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் அருண் விஜய் முன்னதாக மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் அக்னிச்சிறகுகள், மீண்டும் காவல்துறை அதிகாரியாக சீனம் மற்றும் குத்துச்சண்டை வீரராக மிரட்டியுள்ள பாக்ஸர் உள்ளிட்ட திரைப்படங்கள் வரிசையாக ரிலீசாக காத்திருக்கின்றன.

மேலும் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள பார்டர் திரைப்படம் ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில், மீண்டும் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் புதிய வெப்சீரிஸில் அருண்விஜய் நடித்து வருகிறார்.  இந்த வரிசையில் தமிழ் சினிமாவின் முன்னணி கமர்சியல் இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் யானை.

அதிரடியான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகியிருக்கும் யானை திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், சமுத்திரகனி, யோகிபாபு அம்மு அபிராமி மற்றும் விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள யானை திரைபடத்திற்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

முன்னதாக யானை திரைப்படம் வருகிற மே மாதம் 6ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளது. விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க யானை திரைப்படம் வருகிற ஜூன் 17ஆம் தேதி ரிலீஸாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.