தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராக ஜொலிக்கும் நடிகர் அஜித் குமார் கடைசியாக நடித்து வெளிவந்த வலிமை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் புதிய AK62 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித்குமார் நடிக்கும் AK62 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மீண்டும் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் திரைப்படம் துணிவு. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் H.வினோத் - அஜித் குமார் கூட்டணியில் தயாராகும் துணிவு திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கும் துணிவு திரைப்படத்தில் ராஜதந்திரம் வீரா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நீரவ்ஷா ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குடி படத்தொகுப்பு செய்யும் துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார்.

துணிவு திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று அக்டோபர் 16ஆம் தேதி அதிகாலை சென்னையில் உள்ள மவுண்ட் ரோட்டில் அமைந்துள்ள எல்ஐசி கட்டிடத்திற்கு அருகே துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இன்று காலை நடைபெற்ற இந்த படப்பிடிப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.