80 வயது முதியவர் மறுமணத்திற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்ததால் மகன் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் புனேவில் 80 வயது முதியவர் திருமண தகவல் மையத்தில் மறுமணத்திற்காக பதிவு செய்ததற்காக அவரது மகன் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் புனேவில் ராஜ்குருநகர் பகுதியில் பேக்கரி வைத்து நடத்துபவர் சேகர். இவரது தந்தை சங்கர் 80 வயது முதியவர். சேகரின் தாய் 10 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் சேகரின் தந்தை சேகரின் வீட்டில் அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். சேகரின் தந்தை தன்னுடைய பெரும்பான்மையான நேரங்களை செய்தித்தாள்கள் வாசிப்பதிலும் செல்போனை பார்ப்பதிலும் செலவழித்து வந்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து சேகரின் தந்தை சில மாதங்களாக செய்தித்தாள்களில் வெளியாகும் திருமணத் தகவல்களை தொடர்ச்சியாக கண்காணிப்பதாகவும் சில தகவல் மையங்களில் தனது பெயரை பதிவு செய்திருப்பதாவும் சேகரின் மனைவி சேகரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று சேகர் மதிய உணவிற்காக தன்னுடைய வீட்டிற்கு வந்தபோது வீட்டில் அவரது தந்தை மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது சேகர் அவரிடம் திருமணத் தகவல் மையத்தில் பெயர் பதிவு செய்துள்ளீர்களா? என்று கேட்டுள்ளார். அதை அவரது தந்தை மறுத்துள்ளார். அப்போது அவரது செல்போனை வாங்கி பார்த்த போது அவர் திருமணத் தகவல் மையத்தில் பதிவு செய்ததும் அதற்கான கட்டணம் செலுத்தியிருந்ததும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இதனால் ஆத்திரமடைந்த சேகர் அவருடைய 80 வயது தந்தையை கத்தியால் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி செய்துள்ளார். அதன்பின்பு கல் கொண்டு பலமாக தலையில் அடித்து கொலை செய்துள்ளார். மேலும் தலையை துண்டிக்கவும் முயற்சி செய்துள்ளார். இதையடுத்து போலீஸ் ஸ்டேஷன் சென்ற சேகர் தன்னுடைய தந்தையை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்துள்ளார். இதுகுறித்து போலீசார் ஐபிசி 302-ன் கீழ் சேகரின் மீது வழக்குப்பதிவு செய்து  கைது செய்துள்ளனர்.