தனது மனைவியுடன் சேர்ந்து சாமியார் ஒருவர், மாணவிக்கு கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கொடுத்து மாணவியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகர் விநாயகர் கோயில் தெருவில் இளம் பெண் ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர், அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இந்த மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், சிறுமியின் பெற்றோர் அங்குள்ள மருத்துவனையில் பல முறை சிகிச்சை அளித்தும், அது பயன் அளிக்கவில்லை. 

இதனையடுத்து, அங்குள்ள விநாயகபுரம் சூரப்பட்டு ரோடு லக்ஷ்மிகாந்த் அம்மாள் தெருவில் உள்ள ஷீரடி புரம் சர்வ சக்தி பீடத்தில் நிர்வாகியான சங்கர நாராயணன் என்பவரிடம், தனது பாட்டியுடன் விபூதி வாங்க அந்த சிறுமி சென்றிருக்கிறார். 

அப்போது, அந்த மாணவி 11 ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, அடுத்த ஆண்டு அந்த மாணவி 12 ஆம் வகுப்பு படிக்கும் சமயத்தில் மறுபடியும் அதே ஆசிரமத்தில் விபூதி வாங்க அந்த மாணவி சென்று உள்ளார். அப்போது, சங்கரநாராயணன் அவரது மனைவி புஷ்பா ஆகிய இருவரும் அந்த மாணவிக்கு குடிக்க ஒரு ஜூஸ் கொடுத்து உள்ளனர்.

ஆனால், அதனை குடித்த அடுத்த சில நிமிடத்திலேயே அந்த மாணவி மயக்க நிலைக்கு சென்ற நிலையில், அந்த மாணவியை சங்கர நாராயணன் தனது மனைவியுடன் துணையுடன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

அதன் பிறகு, அந்த இளம் பெண் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணமாகி உள்ளது. திருமண்த்திற்குப் பிறகு, தனது கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக திருமணமான இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக ஆசிரமத்திற்கு வரவழைத்து பயமுறுத்தி சாமியார் சங்கர நாராயணன் பலமுறை அவரை பலவந்தமாக அவர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இதனால், கர்ப்பம் அடைந்த அந்த இளம் பெண், சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்தார்.

ஆனால், அந்த பெண் பயத்தின் காரணமாக,  இது தொடர்பாக யாரிடமும் எந்த புகாரும் கொடுக்காமல் இருந்து உள்ளார்.

இதனையடுத்து, குழந்தையுடன் அந்த பெண் தனது வீட்டிற்கு வந்த பிறகும், அந்த சாமியார் மறுபடியும் தனது பாலியல் இச்சைக்கு இணங்கி வர வேண்டும் என அவர் மிரட்டி வந்திருக்கிறார்.

இதனால், பொங்கி எழுந்த அந்த பெண், அங்குள்ள காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். 

இந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீசார், சம்மந்தப்பட்ட சாமியாரை அதிரடியாக கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், சாமியாரின் மனைவியையும் போலீசார் கைது செய்து அவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.