துணி சலவை செய்யும் தள்ளுவண்டியில் 5 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அச்சிறுவன் பட்டினியால் இறந்த போனது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு கொடுமை நடந்திருக்கிறது.

விழுப்புரம் பகுதியில் உள்ள சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேல் தெரு என்னும் பகுதியில் உள்ள ஒரு மருந்துக்கடை அருகில், இஸ்திரி தள்ளுவண்டி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

இதில், 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டான். 

அந்த தள்ளுவண்டியில் துண்டை விரித்து, அதன் மீது அந்த சிறுவன் கிடத்தப்பட்டிருந்தான்.

இதனை அந்த வழியாக சென்ற பொது மக்கள் பார்த்து விட்டு, விழுப்புரம் மேற்கு போலீசாருக்கு தகவல் கூறியுள்ளனர். 

இது குறித்து உடனடியாக விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்தில் பரிதாபமாக கிடந்த சிறுவனின் உடலை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். 

அதன் தொடர்ச்சியாக, சிறுவனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் சடலமாக மீட்கப்பட்ட அந்த 5 வயது சிறுவன், நீலநிற டி சர்ட்டும், வெள்ளை மற்றும் சிகப்பு நிற கட்டம் போட்ட டிரவுசரும் அணிந்திருந்ததை குறித்துக்கொண்ட போலீசார், “இந்த சிறுவன் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவன்?” என்கிற விவரம் குறித்து, அந்த பகுதி மக்களிடம் விசாரித்து வந்தனர்.

அத்துடன், “அந்த பகுதியில் எதாவது ஒரு கள்ளக் காதல் விவகாரத்தில், இந்த சிறுவனை யாராவது தலையணையால் அமுக்கியோ, கழுத்தை நெரித்தோ கொலை செய்தனரா?” என்றும், பல்வேறு கோணங்களிலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

இவற்றுடன், சிறுவன் இறந்து கிடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றியும் போலீசார் விசாரனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தான், “அந்த சிறுவன் பட்டினியால் உயிரிழந்துள்ளான்” என்கிற அதிர்ச்சி தகவல், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது.

முக்கியமாக, “இந்த சிறுவன் கொலை செய்யப்படவில்லை என்றும், சிறுவனின் குடலில் 2 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதனால், சிறுவன் பசியால் உயிரிழந்து இருக்கலாம்” என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, உயிரிழந்த சிறுவன் யாருடைய குழந்தை என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், இது வரை அந்த குழந்தைக்கு யாரும் உரிமை கொண்டாடி வரவில்லை என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணை தொடரந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.