மலையாளத் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி, தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கும் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த குருப் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து மலையாளத்தில் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக துல்கர் நடித்துள்ள SALUTE திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

முன்னதாக தெலுங்கில் இயக்குனர் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் ராணுவ வீரராக துல்கர் சல்மான் நடித்துள்ள அழகிய காதல் திரைப்படமான யுத்தம் ராசினா பிரேம கதா மற்றும் பாலிவுட்டில் பிரபல இயக்குனரான பால்கி இயக்கத்தில் CHUP- REVENGE OF THE ARTIST எனும் த்ரில்லர் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார் துல்கர் சல்மான்.

இதனிடையே திரை உலகில் முன்னணி நடன இயக்குனரான பிருந்தா மாஸ்டர் இயக்குனராக களமிறங்கும் ஹே சினாமிகா படத்திலும் துல்கர் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி நடிக்க நக்ஷத்ரா நாகேஷ் மற்றும் RJ விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் கிலோபல் ஒன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ஹே சினாமிகா படத்திற்கு ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். இந்நிலையில் ஹே சினாமிகா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற டிசம்பர் இருபத்தி ஒன்றாம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹே சினாமிகா திரைப்படம் நேரடியாக Netflix-ல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.