பாலியல் தொல்லை காரணமாக பிளஸ் 1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், சாகும் முன் “பாதுகாப்பானது கல்லறையும்.. தாயின் கருவறையும்..” தான் என்று, அவர் உருக்கமாக எழுதிய கடிதம் தற்போது கைப்பற்றப்பட்டு உள்ளது.

அதாவது, சென்னையை அடுத்து உள்ள மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். 

இந்த 17 வயது மாணவி, அங்குள்ள பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். 

இந்த சூழலில் தான், நேற்று மதியம் தாயுடன் வீட்டில் பேசிக்கொண்டிருந்த மாணவி, தனது அறைக்குள் சென்று உள்ளார். ஆனால், வெகு நேரம் ஆகியும் அவரது கதவு திறக்கப்படாதது கண்டு சந்தேகம் அடைந்த அந்த மாணவியின் தாயார், எவ்வளவோ கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை.

இதனையடுத்து, வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது, அந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார் கதறி அழுத நிலையில், அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து விரைந்து வந்த மாங்காடு போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன், அவரது வீட்டில் போலீசார் சோதனையும் நடத்தினர்.

இந்த சோதனையில், மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக உருக்கமாக எழுதிய 3 கடிதங்கள் போலீசாரிடம் கிடைத்து உள்ளன.

அந்த கடிதத்தில், 2 கடிதங்களில் அவர், “ஆசிரியர்கள், உறவினர்கள் யாரையும் நம்பக்கூடாது” என்றும், குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக, “இந்த உலகத்தில் பாதுகாப்பானது கல்லறையும்.. தாயின் கருவறையும்.. தான்’ என்றும், குறிப்பிட்டிருந்தார்.

மிக முக்கியமாக, “பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லை” என, அந்த மாணவி உருக்கமாக எழுதி இருந்ததாக போலீசார் தற்போது தெரிவித்து உள்ளனர்.

அதே போல், அந்த மாணவி எழுதிய மற்றொரு கடிதத்தை அந்த மாணவியே எழுதி விட்டு, அதன் பின்னர் அவரே அதனை கிழித்து போட்டு உள்ளார். 

அப்படி, எழுதி கிழித்துப் போட்ட அந்த கடிதத்தில், “முன்னாள் ஆசிரியை ஒருவரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்ததால் தான், நான் தற்கொலை செய்து கொள்வதாகவும், எனது சாவுக்கு அவரே காரணம் எனவும் அவரது பெயரை குறிப்பிடாமல் எழுதி இருந்ததாகவும்” போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து, மாங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, தற்கொலை செய்துகொண்ட ”மாணவி குறிப்பிட்ட ஆசிரியையின் மகன் யார்?” என்று, தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கூறும் போது, “எங்கள் மகள், இதற்கு முன்பு தனியார் பள்ளியில் படித்து வந்தாள். அந்த தனியார் பள்ளி ஆசிரியையின் மகன் தான் என் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். அவரை கைது செய்து தூக்கில் போட வேண்டும்” என்று, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.

மேலும், சென்னை மாங்காட்டில் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 

இதன் படி, மாணவியின் செல்போன் மற்றும் கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். 

மிக முக்கியமாக, இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் 17 வயது சிறுவன் உட்பட 3 இளைஞர்களிடம் போலீசார் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.