தமிழ் திரை உலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன் ஆகியோர் இணைந்து நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

அடுத்ததாக தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் முதல் முறையாக சீயான் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

முன்னதாக பிரபல இளம் நடிகர் காளிதாஸ் ஜெயராம், சார்பட்டா பரம்பரை நடிகை துஷாரா விஜயன் மற்றும் கலையரசன் இணைந்து நடிக்கும் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித். அட்டகத்தி படத்திற்கு பிறகு மீண்டும் அழகான காதல் திரைப்படமாக பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ளது நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம்.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் வழக்கமான தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலகி முழுக்க முழுக்க புது படக்குழுவோடு பணியாற்றியுள்ள பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.