வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சிங்க முக மாஸ்க் அணிந்து கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், தற்போது ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையை வழக்கம் போல் கடந்த 15ஆம் தேதி இரவு 10 மணி அளவில் ஊழியர்கள் பூட்டிவிட்டுச் சென்றனர். 

அனால், மறுநாள் காலை அந்த கடையை திறந்து பார்த்தபோது கடையின் பின்பக்கச் சுவர் துளையிடப்பட்டிருப்பதைக் கண்டு ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். 

இவற்றுடன், அந்த கடையில் இருந்து தங்க வைர நகைகள் அதிரடியாக கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார், துளையை பார்வையிட்டு சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அத்துடன், நகைக் கடையின் பின்பக்க சுவரில் ஒரு ஆள் நுழையக்கூடிய அளவு துளை போடப்பட்டு இருப்பதும், அதன் வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் இருந்த நகைகளை அள்ளிச் சென்றதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது.

மேலும்,  8 கோடி ரூபாய் மதிப்பிலான 15 கிலோ தங்கம் மற்றும் 500 கிராம்  வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இதனையடுத்து, மோப்ப நாய்கள் கொண்டும் கொள்ளையர்கள் வந்து சென்ற பாதையை ஆய்வு செய்தார்கள்.

தற்போது நடந்த இந்த கொள்ளை சம்பவத்தில் வட மாநில கொள்ளையர்கள் யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், “கடையில் மொத்தமாக 12 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததாகவும், அவற்றை கொளையர்கள் ஸ்ப்ரே அடித்து மறைத்துவிட்டு கொள்ளையடித்ததாகவும்” போலீசார் தரப்பில் கூறப்பட்டது. 

இந்த நகை கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருந்தன. 

அதில், ஒரு தனிப்படையினர் “திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம்” என்ற, கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.

குறிப்பாக, “கொள்ளையடிக்கப்பட்ட நகை கடையின் சிசிடிவி கேமிராவில், சிங்கம் போன்ற  மாஸ்க் அணிந்த ஒருவரது உருவம் பதிவாகியிருந்தது. அதனை இரு நாட்களுக்கு முன் காவல் துறையினர் வெளியிட்டனர். அதைக் கொண்டு கொள்ளையர்களை தேடி வந்தனர். 

இந்த நிலையில் தான், “வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக” காவல் துறை தரப்பில் தற்போது தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அதுவும், குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த டீக்காராமன் என்பவரை காவல் துறையினர் கைது செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 

இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். தற்போது கைது செய்யப்பட்ட நபர் முகமூடி போட்டிருந்தவரா? அல்லது சிசிடிவிகளுக்கு ஸ்ப்ரே அடித்தவரா? என்று உறுதியான தகவல்கள் எதுவும் தற்போது தெரிவிக்கப்படவில்லை. ஆனால், கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் தங்களது பாணியில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், இந்த கொள்ளை வழக்கு, மீண்டும் சூடுப்பிடித்து உள்ளது.