அரசு பள்ளியின் ஆசிரியரை, அதே பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவர்கள் அடிக்க பாய்ந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பெரும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த அரசுப் பள்ளியில் தாவரவியல் ஆசிரியராகப் சஞ்சய் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த ஆசிரியர், வகுப்பறையில் இருந்த சக மாணவர்களிடம் ரெக்கார்ட் சமர்ப்பிக்கும் படி கேட்டிருக்கிறார்.

ஆனால், ஆசிரியர் கூறியதை அங்கிருந்து சில மாணவர்கள் துளியும் பொருட்படுத்தாமல், நோட்டையும் சமர்ப்பிக்காமல் அலட்சியமாக இருந்து உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, நேற்றைய தினம் மீண்டும் பள்ளிக்கு வந்த அந்த மாணவர்களின் வகுப்பறைக்கு சென்ற ஆசிரியர் சஞ்சய், குறிப்பிட்ட அந்த மாணவர்களிடம் ரெக்கார்டு நோட்டு சமர்ப்பிக்காதவர்களை எழுந்திருக்கச் சொல்லி, கேள்வி கேட்டிருக்கிறார்.

அப்போது, அந்த வகுப்பறையில் இருந்த சில மாணவர்கள், அந்த ஆசிரியரை தகாத வார்த்தைகளால் கண்டபடி பேசி திட்டிவிட்டு, அந்த ஆசிரியரின் முன்பு தனது சட்டையை களற்றி ரவுடி போல், அந்த ஆசியரை தாக்க பாயந்திருக்கிறார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த ஆசிரியர், அந்த மாணவர்களை திட்ட, அங்கு மேலும் 2 மாணவர்கள் அந்த ஆசிரியரின் அருகில் சென்று, அந்த ஆசிரியரை மிகவும் ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

பள்ளி மாணவர்களின் இந்த பயங்கரமான செயலால் கடும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த அந்த பள்ளி ஆசிரியர், உடனடியாக அந்த வகுப்பறையை விட்டு வெளியேறி, பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம், சக பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பள்ளியின் ஆசிரியரை சக பள்ளி மாணவர்கள் 3 பேர் அடிக்க பாய்ந்த சம்பவம் தொடர்பான வீடியோவும், அந்த பகுதியில் உள்ள சமூக வலைத்தளங்களில் பரவி உள்ளது.

இந்த வீடியோ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் கவனத்திற்கு சென்ற நிலையில், இந்த வீடியோவைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தார்.
 
அதே நேரத்தில், அந்த பள்ளியின் சக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியரிடம் சென்று “சமீபகாலமாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் தகாத முறையில் நடந்து கொள்வதும் ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது என்றும், இதனால் இது போன்ற சம்பவங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” வலியுறுத்தி இருக்கிறார்கள்.

இதனையடுத்து, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வேலன், சம்மந்தப்பட்ட மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தினார்.

அத்துடன், இந்த வீடியோ அந்த மாவட்டம் முழுவதும் பரவி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்றைய தினம் காலையில் வாணியம்பாடி உதவி மாவட்ட ஆட்சியர் காயத்ரி சுப்பிரமணி, ஆம்பூர் தாசில்தார் பழனி ஆகியோர் மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று, பள்ளியின் தலைமை ஆசிரியர் வேலனிடம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். 

இதனையடுத்து, பள்ளி ஆசிரியரை அவதூறாக பேசி, சக மாணவர்கள் மத்தியில் தாக்க முயன்ற அந்த மாணவர்களிடம் உதவி ஆட்சியர் விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் தான், ஆசிரியரை தாக்க முயன்ற அந்த மாணவன் பள்ளியில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, இந்த சம்பவத்தின் போது அந்த பள்ளி ஆசிரியரை திட்டிய மேலும் இரு மாணவர்களும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இச்சம்பவம், தமிழகம் முழுவதும் உள்ள சக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.