தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அசோக்செல்வன் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளிவந்த சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனையடுத்து பீட்சா 2 படத்தில் கதாநாயகனாக களமிறங்கிய அசோக் செல்வன் நடிப்பில் தொடர்ந்து வெளிவந்த தெகிடி திரைப்படம் பலரது கவனத்தை ஈர்த்தது.

தொடர்ந்து கூட்டத்தில் ஒருவன், சம் டைம்ஸ், ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள் என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள அசோக் செல்வன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மன்மத லீலை.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மன்மதலீலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் நித்தம் ஒரு வானம் மற்றும் ஆகாசம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் முன்னதாக அசோக்செல்வன் நடித்துள்ள ஹாஸ்டல் திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கும் ஹாஸ்டல் படத்தில் சதீஷ், நாசர், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அடி கப்பயர கூட்டமணி படத்தின் தமிழ் ரீமேக்காக ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ஹாஸ்டல் படத்திற்கு பிரவீன்குமார் ஒளிப்பதிவு செய்ய, போபோ ஷஷி இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஹாஸ்டல் திரைப்படத்தின் ட்ரைலர் நாளை (ஏப்ரல் 23ஆம் தேதி) வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.