“மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வந்தால், அது பறிமுதல் செய்யப்பட்டு திருப்பி தர படமாட்டாது” என்று, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடியாக தெரிவித்து உள்ளார்.

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. இதனால், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் முதல் தனியார் பள்ளிகள் வரை அனைத்துப் பள்களுமே தோரணம், வாழை மரங்கள் கட்டி முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி, சில இடங்களில் சால்வை அணிவித்தும் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதில் பெரும்பாலன மாணவர்கள் புது சீருடை புது புத்தக வாசம் என்று, விடுமுறைக்கு பிறகு உற்சாகத்துடன் நேற்று முதல் பள்ளிகளுக்கு வருகை தந்து வருகின்றனர். அதன்படி, 1 ஆம் வகுப்பில் இருந்து 9 ஆம் வகுப்பு வரை புதிய மாணவர்கள் சேர்க்கையும் தற்போது பள்ளிகளில் தொடங்கி உள்ளது.

அத்துடன், நேற்று முதல் அடுத்து வரும் ஒரு வார காலத்திற்கு அனைத்து மாணவர்களுக்கும் புத்துணர்வு பயிற்சியும், உளவியல் ரீதியான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதன் பிறகு, அடுத்த வாரம் முதல் வழக்கமான வகுப்புகள் நடத்தப்படும் என்றும், கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தான், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மக்களுக்கு பட்டா மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொ, “பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வந்தால் நிச்சயம் பறிமுதல் செய்யப்படும்” என்று, தெரிவித்தார். 

அத்துடன், “வகுப்பறைக்கு மாணவர்கள் கொண்டுவரும் செல்போன்களை பறிமுதல் செய்தால், அது திருப்பி  தர படமாட்டாது” என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

“மாணவர்களின் கவன சிதறலை போக்கும் வகையில், பள்ளிகளில் முதல் 5 நாட்கள் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும் என்றும், அதன் பிறகு தான் வகுப்புகள் தொடங்கும்” என்றும், அவர் குறிப்பிட்டார். 

“11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி தொடங்கிய உடன் தன்னார்வ அமைப்புகள், காவல் துறையை கொண்டு புத்தாக்க பயிற்சி வழங்கப்படும்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், “மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் தரமறுக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்தார். 

குறிப்பாக, “தனியார் பள்ளிகள் அங்கு படிக்கும் மாணவர்களை சீறுடை, புத்தகம் உள்ளிட்டவற்றை பள்ளிகளிலேயே வாங்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த கூடாது” என்றும், அவர் வலியுறுத்தினார்.

“அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது என்றும், அரசு பள்ளியில் சேரும் மாணவர்களை தக்க வைக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்” என்றும், அவர் உறுதி அளித்தார்.

அத்துடன், “வரும் கல்வியாண்டில் 9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்” என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

இதனிடையே, 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.