இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் சிறந்த நடிகைகளில் ஒருவராகவும் முன்னணி நட்சத்திர நாயகியாகவும் வலம் வரும் நடிகை டாப்ஸி தற்போது தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். இயக்குனர் அஜய் பால் இயக்கத்தில் ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக தயாராகும் ப்ளர் திரைப்படத்தை ZEE ஸ்டூடியோ உடன் இணைந்து தனது அவுட் சைடர்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரித்து நடிக்கிறார் டாப்ஸி.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் டாப்ஸி முன்னதாக தமிழில் ஜன கண மன மற்றும் ஏலியன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் பாலிவுட்டில் தோபாரா மற்றும் வோ லட்கி ஹாய் கஹான்? உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

இந்த வரிசையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான மிதாலி ராஜ்-ன் பயோபிக் திரைப்படத்தில் மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்துள்ள சபாஷ் மித்து திரைப்படம் வருகிற ஜூலை 15-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.வயாகாம்18 ஸ்டுடியோஸ் கொலோசியம் மீடியா புரோடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ள சபாஷ் மித்து படத்தை இயக்குனர் ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கியுள்ளார். 

மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்து சகாப்தத்தை உருவாக்கியுள்ள மிதாலிராஜ் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தனது சிறப்பான பங்களிப்பை அளித்தவர். இந்த ஆண்டு (2022) கடந்த ஜூன் 8-ஆம் தேதி மிதாலிராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் மிதாலி ராஜின் பயோபிக் திரைப்படமாக தயாராகியிருக்கும் சபாஷ் மித்து திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. அசத்தலான சபாஷ் மித்து ட்ரைலர் இதோ…