நள்ளிரவில் உரிமையாளரின் வீட்டிற்கு வந்த விஷ பாம்பிடம் சண்டையிட்டு உரிமையாளரின் குடும்பத்தையே காப்பாற்றியது வளர்ப்பு நாய்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மூலக்குளம், ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் ரமணி. இவர் கல்வித்துறை அதிகாரியாக இருந்து வருகிறார். ரமணியின் மனைவி சித்ரா. இவர் குருமாம்பேட்டில் செயல்பட்டு வரும் காமராஜர் வேளாண் அறிவியல் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தம்பதிகள் இருவருக்கும் 2 மகன்கள் உள்ள நிலையில், வீட்டில் ராட் வீலர் ரகத்தை சேர்ந்த 2 வெளிநாட்டு நாய்களையும் லெனி, மிஸ்ட்டி என்று பெயர் வைத்து வளர்ந்து வந்துள்ளனர். வீட்டினை சுற்றிலும் மதில் சுவர் இருப்பதால், இரவு நேரங்களில் நாய்களை பாதுகாப்புக்காக கட்டிபோடாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் நாய்கள் இரண்டும் வீட்டினை சுற்றி பாதுகாத்து வலம்வரும் நிலையில், மிஸ்டிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு, முகம் வீங்கி சோர்வுடன் காணப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ரமணியின் குடும்பத்தார், அங்குள்ள கால்நடை மருத்துவமனையில் நாயை சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.

அதனைத்தொடர்ந்து சிகிச்சைக்கு பின்னரும் நாய் சோர்வுடன் இருந்து வந்த நிலையில், வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று ரமணி பார்க்கையில், தேங்காய் நார் மெத்தையில் 3 அடி நீளமுள்ள கண்ணாடி வீரியன் பாம்பு இறந்து கிடந்துள்ளது. இதனால் நள்ளிரவு நேரத்தில் மிஸ்ட்டி பாம்பை கடித்து கொலை செய்ததால், அதன் உடலிலும் விஷம் ஏறி உடல்நலம் பாதிக்கப்பட்டது உறுதியானது.

மேலும் உடனடியாக நாயை புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் இருக்கும் கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கவே, நாயின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், "கண்ணாடி வீரியன் பாம்பு கடித்து, விஷம் இரத்தத்தில் கலந்தால் சிலமணிநேரத்தில் உயிர் இழப்பு ஏற்படலாம். நாயின் மூக்கு பகுதியில் பாம்பு கடித்துள்ளதால், விஷம் இரத்தத்துடன் கலக்கவில்லை. இதனால் நாய் உயிர்பிழைத்துள்ளது. இன்னும் சில நாட்களில் அது வழக்கமான வாழ்க்கையை பெற்றுவிடும்" என்று தெரிவித்தனர்.