இராமநாதபுரத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்புப் பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

அதன்பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ``இராமநாதபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அரசு அறிவித்த ஆலோசனைகளை ஏற்று சிறப்பாக செயல்பட்டதன் காரணத்தால், இந்நோய்ப் பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில், இந்த நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு நாம் கடுமையாக பல நடவடிக்கைகளை எடுத்தோம். ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தோம். இதன்மூலம் நோய் தொற்றுப் பரவல் தடுக்கப்பட்டது. அதனால்தான் இன்றைக்கு கொரோனா தொற்றுப் பரவல் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் குறைவாக இருக்கிறது. 

இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்த நோய்த் தொற்று எவ்வாறு பரவுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. அப்படிப்பட்ட ஒரு கொடிய நோய் இது. இந்நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு, அரசு கடுமையான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. மருத்துவ நிபுணர்கள் கூறுகின்ற ஆலோசனைகளின்படி அந்த மாவட்ட நிர்வாகத்திற்கு ஆலோசனைகளை வழங்கியதன் மூலமாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் அதற்கேற்றவாறு செயல்பட்டதன் விளைவாக இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்நோய்ப் பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது.

இன்னும் குறுகிய காலத்தில், இந்த எண்ணிக்கைகளை குறைத்து, இந்நோய் தொற்றுப் பரவல் தடுக்கப்பட்டு இயல்பு நிலைக்கு வருவதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதோடு, தமிழ்நாடு முழுவதும் இந்த நோய்ப் பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது. இந்திய அளவில், மற்ற மாநிலங்களில் இயநோய்ப் பரவல் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தான் இந்நோய்ப் பரவல் குறைந்து கொண்டிருக்கிறது" என்று கூறியிருந்தார்.

ஆய்வுக் கூட்டங்களுக்கு இடையே இன்று பிற்பகலில் செய்தியாளர்களை மீண்டும் சந்தித்து, முதல்வர் பழனிசாமி பேசியிருக்கிறார். அப்போது அவர்,

``வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. விவசாயிகளை பாதிக்கக் கூடிய எந்த சட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது. தமிழக அரசால் இயற்றப்பட்ட சட்டத்தை ஒட்டியே இந்த சட்டமும் உள்ளது. நான் எப்போதுமே விவசாயி தான். வேளாண் மசோதா பற்றி தெரியாமல் பேசுகிறார் ஸ்டாலின். எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள். பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் வேளாண் சட்டத்தில் குறைகாண முடியாது"என தெரிவித்துள்ளார்.

மேலும், ``நான் ஒரு விவசாயி. ஆனால் மு.க. ஸ்டாலினுக்குத்தான் விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது. நான் ஒரு விவசாயி  என்பதால்தான் பல விவசாய திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். ஆனால், விவசாயிகளுக்கு எதிரான ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்தான்" என்றும் கூறினார்.

மாநிலங்களவையில் வேளாண் மசோதாவில் உள்ள பாதகமான அம்சங்கள் குறித்துப் பேசிய அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ``வேளாண் மசோதாவில் சாதகமான அம்சங்கள் இருந்ததால்தான் அதனை ஆதரித்துள்ளோம். பாலசுப்ரமணியத்தின் பேச்சு குறித்து அவரிடம் விளக்கம் கேட்போம். கோட்டையில் பாஜக கொடி பறக்கும் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் கூறிய கருத்துக்கு, கோட்டையில் தேசியக் கொடிதான் பறக்கும் என்று பதிலடி கொடுத்ததோடு, தமிழகத்தில் அதிமுக ஆட்சியே தொடரும்" என்றும் கூறினார்.

சசிகலா விடுதலையாவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய  கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதிலளிக்க மறுத்துவிட்டார்.