இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் நந்தலாலா. இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் கலையரசன். அதைத் தொடர்ந்து அட்டக்கத்தி, முகமூடி, மதயானைக் கூட்டம், டார்லிங், உறுமீன் போன்ற படங்களில் நடித்தார். ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் இவரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமானது என்றே கூறலாம். அந்த படத்தில் வரும் அன்பு பாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. 

நடிகர் கலையரசனுக்கு இந்த ஆண்டு ஸ்பெஷல் என்றே கூறலாம். லாக்டவுனில் கெளதம் மேனன் இயக்கிய ஒரு சான்ஸ் குடு பெண்ணே பாடலில் நடித்திருந்தார். ஷாந்தனு, மேகா ஆகாஷ் நடித்த இந்த பாடல் ஆல்பம் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்திலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார் கலையரசன். எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. மேலும் பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் குதிரை வால் படத்தில் நடிக்கவுள்ளார். 

இந்நிலையில் நடிகர் கலையரசன் செய்துள்ள உதவி பாராட்டை பெற்று வருகிறது. கலையரசனின் பாண்டிச்சேரி ரசிகர் மன்ற நிர்வாகியான தினேஷ் என்பவர், நுரையீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துள்ளார். இதையடுத்து இவ்விவரம் அறிந்த கலையரசன், அவரது வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியுள்ளார். 

மேலும் சிகிச்சைக்கு தேவைப்படும் உதவிகளை வழங்குவதாகவும் கூறியுள்ளார். சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு சென்றாலும் பராவாயில்லை, நான் பார்த்துக் கொள்கிறேன் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நிஜத்திலும் மெட்ராஸ் படத்தில் வரும் அன்பு போல் தான் என கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். 

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் சல்பேட்டா பரம்பரை படத்தில் நடிக்கிறார் கலையரசன். வட சென்னையில் உள்ள இளைஞன் தனது பாக்ஸிங் கனவுகளை எப்படி நிஜமாக்கிக்கொள்கிறான் என்பதைப் பற்றிய கதையாக இப்படம் அமையவுள்ளது. மேலும் இப்படத்தில், அட்ட கத்தி தினேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்துக்காகக் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, தனது உடற்கட்டை முற்றிலுமாக மாற்றிய ஆர்யா, தனது புகைப்படங்களை ரஞ்சித் சார் நான் ரெடி என சில மாதங்களுக்கு முன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதையடுத்து இப்படத்திற்கான முதற்கட்ட வேலைகள் துவங்கப்பட்டது. இருப்பினும், கொரோனா தொற்று காரணமாக தொழில் நிறுத்தப்பட்டதால் படம் தாமதமானது.

இப்போது, சமீபத்திய அறிக்கை என்னவென்றால், வரும் செப்டம்பர் இரண்டாம் வாரம் முதல் இதன் படப்பிடிப்பு தொடங்கும். ஆர்யா தனது பாத்திரத்திற்காக குத்துச்சண்டை திறன்களைப் பயின்று வருகிறார், மேலும் அவர் தனது தொழில் வாழ்க்கையின் மிகவும் சவாலான படம் என்று ஒருமுறை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளிப்படுத்தியிருந்தார். போத ஏறி, புத்தி மாறி எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான துஷாரா வடசென்னை பெண்ணாக ஆர்யாவுக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது.

சில நாட்கள் முன்பு ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் கலையரசனின் பாக்ஸிங் பயிற்சி வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் இதுதான் இறுதி கட்ட படப்பிடிப்பு என்பதையும் பதிவு செய்துள்ளார். ஆர்யா பகிர்ந்த இந்த வீடியோ இணையத்தை வைரலாகியது.