“தமிழகத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது” என்று, பள்ளி ஆசிரியை ஒருவர் கண்டித்த சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் ஹிஜாப் சர்ச்சை எழுந்து உள்ளது, பெரும் சர்ச்சைக்கு வித்திட்டு உள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த மாதம் ஹிஜாப் விவகாரம், மிகப் பெரிய அளவில் விஸ்வரும் எடுத்து, நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதன் காரணமாக, நர்நாடகா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய அந்தப் பள்ளி, கல்லூரி நிர்வாகம் அதிடியாக தடை விதித்தது.

ஆனால், இதற்கு எதிராக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராடியதால், இஸ்லாமிய மாணவிகள்  தொடர்ந்து போராடி வந்தனர். ஆனால், இதற்கு பதிலடி தரும் விதமாக, அந்த மாநிலத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள இந்துத்துவ மாணவர்கள் காவி துண்டு அணிந்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு வந்ததால், அங்கு பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. 

இதனால், அந்த மாநிலத்தில் பெரும் போராட்டங்கள் வெடித்த நிலையில், இந்த பிரச்சனையை கையாள முடியாத அந்த மாநில அரசு, வெறு வழியின்றி பள்ளி மற்றும் கல்லூரிகளை அதிரடியாக மூடியது. அதன் பின்னர், குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் பள்ளிகள் மட்டும் தொடங்கப்பட்ட நிலையில், அங்கு  ஹிஜாப் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. எனினும், இது குறித்த வழக்கு அந்த மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் தான், கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் ஹிஜாப் சர்ச்சை தற்போது வெடித்து உள்ளது.

அதுவும், தமிழகத்தின் ஆன்மிக நகரமாக பார்க்கப்படும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இந்த பள்ளியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.  இதே பள்ளியில் லட்சுமி என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 

இந்த சூழலில் தான், இந்த பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவிகள் சிலர், எப்போதும் போல ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்து உள்ளனர். ஆனால், ஹிஜாப் அணிந்து வந்த பள்ளி மாணவிகளை ஆசிரியர் லட்சுமி, “இனி பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வரக்கூடாது” என்று, கண்டித்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால், அதிர்ச்சியடைந்த பள்ளி மாணவிகள் வீட்டிற்கு திரும்பியதும் தங்களின் பெற்றோர்களிடம் இது பற்றி கூறி உள்ளனர்.

இதனால், கடும் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தற்போது சம்மந்தப்பட்ட அரசுப் பள்ளிக்கு வந்து முற்றுகையிட்டனர். இதனால், அங்கு, பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

அத்துடன், ஏற்கனவே 2 வாரங்களுக்கு முன்பு இதே போன்ற ஒரு சம்பவம் அந்த பகுதியில் நடைபெற்றதாகத் தெரிவித்த பள்ளி மாணவியின் பெற்றோர், “இனியும் இது போன்ற எந்த சம்பவங்களும் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

இதனால், அந்த பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதால், அந்த பள்ளியின் முன்பு ஊர் மக்கள் பலரும் கூடி உள்ளனர். 

இதையடுத்து, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் போராட்டம் நடத்திய பெற்றோர்களை அழைத்து “இனி, இது போன்ற ஒரு சம்பவங்கள் நடைபெறாது” என்று, உறுதி அளித்தார். இதனையடுத்து, மாணவிகளின் பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர். எனினும், இந்த சம்பவம், அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.