10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், “10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்குவதாக” அறிவிக்கப்பட்டு உள்ளது.

நடப்பு கல்வியாண்டு 2021 - 2022 ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி இன்று அறிவிக்கப்படும் என்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன் படி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

அதன் படி,

பொதுத்தேர்வு தேதிகள்

- தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்குகிறது.

- தமிழகத்தில் மே 5 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது.

- தமிழகத்தில் மே 6 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகிறது. 

- அதே போல், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 9 ஆம் தேதி தொடங்குகிறது.

- 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதி முதல் தொடங்கி, மே 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

- மேலும், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி, மே 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 
- 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அனைத்தும் மே 9 ஆம் தேதி தொடங்கி, மே 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தேர்வு முடிவுகள்

- 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17 ஆம் தேதி வெளியிடப்படும். 

- 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும்.

- 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23 ஆம் தேதி வெளியிடப்படும்.

குறிப்பாக, தேர்வு அட்டவணையை dge.tn.gov.in என்கிற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும், பள்ளிக் கல்வித்து துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து உள்ளார்.

அதாவது, தமிழகத்தில் கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. 

இதனையடுத்து, கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் புதிய உச்சத்தில் இருந்து வந்த நிலையில், “இந்த ஆண்டும் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா?” என்கிற கேள்வியும் எழுந்தது.

எனினும், தமிழக பள்ளிக் கல்வித் துறை, “இந்த ஆண்டு நிச்சயமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படும்” என்று, உறுதியாக தெரிவித்திருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் அடிப்படையிலேயே, தற்போது 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.