தமிழ் இசை ரசிகர்களை 25 ஆண்டுகளாக தனது இசையால் கட்டிப் போட்டிருக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக அரவிந்தன் படத்திலிருந்து வலிமை படம் வரை இந்த 25 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து நம் நெஞ்சை விட்டு நீங்காத பாடல்களை கொடுத்துள்ளார். தொடர்ந்து இந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து யுவன் இசையில் வரிசையாக திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

முன்னதாக அஜித் குமார் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த வலிமை திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் மற்றும் அதர்வாவின் குருதி ஆட்டம் ஆகிய திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக தயாராகி வருகின்றன.

மேலும் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கும் நானே வருவேன், இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம், இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவாகும் இறைவன் மிகப் பெரியவன், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள விருமன், கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் மற்றும் சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம் ஆகிய திரைப்படங்களுக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

தனது இசைப் பயணத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள யுவன் ஷங்கர் ராஜாவின் இந்த சாதனை பயணத்தை திரும்பி பார்க்கும் வகையில் 25 YEARS OF YUVAN SHANKAR RAJA நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் ஊடகத் துறையினரும் யுவனிடம் பல சுவாரசியமான கேள்விகளை கேட்க அனைத்திற்கும் மனதிலிருந்து பதிலளித்தார் யுவன்.

இந்த நிகழ்ச்சியில் விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட யுவன் ஷங்கர் ராஜா பெண்ணை மையப்படுத்திய திரைப்படத்திற்கான ஸ்கிரிப்டை எழுதி முடித்து உள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே விரைவில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இயக்குனராகவும் களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.