“போர் நடைபெறும் பகுதியில் சிக்கி தவிப்பவர்கள், மீட்புக்குழு வரும் வரை எப்படியெல்லாம் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும்” என்று, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இன்றைய தினம் 7 வது நாளாக போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

அத்துடன், உக்ரைன் நாட்டின் கார்கீவ் நகரில் நேற்று காலை நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி, இந்திய மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், “உக்ரைனில் வசித்து வந்த சுமார் 60 சதவீதம் இந்தியர்கள், உக்ரைனிலிருந்து இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளதாக” இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், போர் நடைபெறும் பகுதியில் சிக்கி தவிக்கும் பொது மக்கள், மீட்புக்குழு வரும் வரை எப்படியெல்லாம் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தியாகராஜன், தகவல் வெளியிட்டு உள்ளார்.

- போர் நடைபெறும் பகுதியில் உள்ள அந்த பகுதியின் நிலைமைகளுக்கு ஏற்ப கொடுக்கப்படும் உள்ளூர் அறிவுரைகளை பொது மக்கள் பின்பற்றுவது அவசியம்.

- வீடு அல்லது கட்டடத்தின் கதவுகள் மற்றும் ஜன்னல்களுக்கு அருகில் மறைந்து நிற்பதை தவிர்க்க வேண்டும்.

- வீடு உள்ளிட்ட இடங்களில் மறைவாக நிற்கும் போது, அந்த கட்டடத்தின் மூலையில், கான்க்ரீட் தூண்களுக்கு அருகில் தங்கியிருப்பது சரியானது.

- போர் நடக்கும் தாக்குதல் சத்தம் கேட்கும் போது, உடனடியாக அனைவரும் தரையில் படுத்துவிட வேண்டும்.

- அந்த மாதிரியான தருணங்களில் செல்போனில் பவர் பேங்க் எடுத்துக்கொள்ளவதுடன், செல்போனையும் முழுமையாக சார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

- நம் நாட்டின் தேசிக்கொடியை கையில் வைத்துக்கொள்ள வேண்டும். அது, நமக்கு பாதுகாப்பை தரும்.

- பதுங்கு குழியை தவிர வேறு எங்கு தங்கினாலும், இரவில் மின்விளக்கை எரிய விடாமல் இருப்பது அனைவருக்கும் நல்லது.

- தாகம் எடுத்தால் மட்டுமே குடிநீர் குடிக்க வேண்டும். அந்த மாதிரியான தருணங்களில் முடிந்த அளவிற்கு தண்ணீரை சேமித்து வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்று.

- ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறும்போது, குடிநீர், உணவு, கல்வி சான்றிதழ்களை மட்டும் உடன் எடுத்துச் செல்வது மிகவும் நல்லது.

இப்படியாக, “போர் நடைபெறும் இடத்தில் சிக்கியிருப்பவர்கள், மீட்புக்குழு வரும் வரை இப்படித்தான் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்” என்றும், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.

இதனிடையே, “உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்கும் விதமாக, பதுங்கு குழியிலோ அல்லது பாதுகாப்பான இடங்களிலோ இருக்குமாறு” முன்னாள் ராணுவ தளபதி என்.சி.விஜ் கேட்டுக்கொண்டு உள்ளார்.