அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

அதாவது, சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட சஞ்சீவிராயன் கோயில் தெருவில் இருக்கும் 49 வது வார்டு வாக்குச்சாவடி மையத்தில் நரேஷ் என்ற நபர், அத்துமீறி புகுந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர், அவரது சட்டையை கழற்றி, அரை நிர்வாணப்படுத்தி அடித்து இழுத்து பேரணியாக அழைத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதுபற்றி தனது ஃபேஸ்புக் வலைதளத்திலும் ஜெயக்குமார் வெளியிட்டார். 

அத்துடன், பொது இடத்தில் ஒரு மனிதனை அரை நிர்வாணப்படுத்தி, அடித்து இழுத்து பேரணியாக அழைத்துச் சென்றதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதே நேரத்தில், அதிமுகவினரால் தாக்கப்பட்ட நரேஷ் என்ற நபர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அப்போது, பாதிக்கப்பட்ட நரேஷ், இது தொடர்பாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.  இந்த நிலையில் தான், இந்த வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.  இதனையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் படி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஜார்ஜ் டவுண் 15 வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முரளி கிருஷ்ணா அதிரடியாக உத்தரவிட்டார். சிறையில் பெரும் சிரமத்துக்கிடையில் ஜெயக்குமார் அவதிப்பட்டு வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், சென்னை பூந்தமல்லி கிளைச் சிறையில் உள்ள அவரது ஜாமீன் மனு கடந்த வாரம் விசாரணைக்கு வர இருந்த நிலையில் தான், சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பான மற்றுமொரு வழக்கில் ஜெயக்குமாரை சென்னை காவல் துறை மீண்டும் கைது செய்தது.

இதனால், அதிமுகவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், அவர் மீதான முதல் வழக்கில், தன்னை ஜாமீனில் வெளியே விட கோரி, சென்னை  ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், இந்த ஜாமீன் மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

இதையடுத்து, ஜெயக்குமார் தரப்பில் ஷெஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்படும் என்கிற தகவலும் வெளியாகி உள்ளன.

முக்கியமாக, அவர் மீது கடந்த 23 ஆம் தேதி பதியப்பட்ட மற்றொரு வழக்கில், ஜெயக்குமாருக்கு வரும் மார்ச் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது. இது, அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக, திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் அவருக்கு ஜாமீ்ன் வழங்க கீழ் நீதிமன்றம் மறுத்த நிலையில், அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

அந்த மனுவில், “எனக்கு எதிராக புகார் அளித்தவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார் எனறும், இந்த சூழலில் என் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும், மருத்துவ அறிக்கையிலும் அவருக்கு காயங்கள் இல்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளனர் என்றும், இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே என் மீது தொடர்ச்சியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன” என்றும், குறிப்பிடப்பட்டு இருந்தது.

“இதை கருத்தில் கொள்ளாமல் கீழ் நீதிமன்றம் எனது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உள்ளது என்றும், இதனால் இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். 

இந்த ஜாமீன் மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தற்போது அதிரடியாக மறுப்பு தெரிவித்து உள்ளது. 

முக்கயமாக, “நாளைய வழக்குகளுக்கான பட்டியல் தயாராகி விட்டதால், நாளை மறுநாள் தான், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும்” என்றும், சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.