“நான் முதல்வன் திட்டம்” அப்படி என்ன ஸ்பெஷல்? திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“ 'நான் முதல்வன் திட்டம்' பெற்ற தாய் போல, இளைஞர்கள் நலனில் முழு அக்கறை கொண்ட திட்டம்” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று 69 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மு.க.ஸ்டாலின் பிறந்தநாளுக்கு, பிரதமர் மோடி உட்பட நாட்டின் பல்வேறு தலைவர்களும் தொடர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான், சென்னை கலைவாணர் அரங்கில் ‘நான் முதல்வன் உலகை வெல்லும் இளைய தமிழகம்’ என்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றைய தினம் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழக திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக கிளவ்டு கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றில் பயிற்சி வழங்கப்படுகிறது.
அத்துடன், மாணவர்களுக்கு ஜப்பான், சீன, ரஷ்ய, பிரெஞ்ச் மொழிகளும் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
அந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எனது கனவு திட்டமான திறன் மேம்பாட்டு திட்டத்தை துவக்கி வைத்தது என் வாழ்வின் பொன்னாள்” என்றும், குறிப்பிட்டார்.
மேலும், “மாணவர்கள், இளைஞர்களை முதல்வனாக மாற்றுவதே நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
குறிப்பாக, “மாணவர்களிடம் பட்டப்படிப்பை தாண்டி தனித்திறமை இருந்தால் தான், போட்டி நிறைந்த இந்த உலகில் வெல்ல முடியும் என்றும், இளைஞர்கள் அனைவரும் அனைத்து விதமான தகுதியும், திறமையும் பெற்று முன்னேறி அனைத்திலும் முதல்வனாக வரவேண்டும்” என்றும், மாணவர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
“கல்வி ஆராய்ச்சி, சிந்தனை, செயல், திறமையில் மாணவர்களை சிறந்தவர்களாக மாற்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது என்றும், எனது கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் தொடக்க நாள் என்பதால் எனது வாழ்வில் இன்று பொன்னாள்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெருமையோடு குறிப்பிட்டார்.
அத்துடன், “மாணவர்கள், இளைஞர்களை முதல்வனாக மாற்றுவதே 'நான் முதல்வன்' திட்டத்தின் உயரிய நோக்கம்” என்றும், முதல்வர் தெரிவித்தார்.
அதே போல், “படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது என்றும், ஆனால் அதற்கான தகுதி பற்றாக்குறையாக உள்ளது என்றும், இளைஞர் சக்தி குறைபாடுடைய சமுதாயமாக உள்ளது என்றும், இதனை நீக்கவே புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது” என்றும், மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
குறிப்பாக, “நான் முதல்வன் திட்டம் மூலம் அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்படும் என்றும், படிப்பு என்பது பட்டம் சார்ந்ததாக மட்டும் அல்ல, திறமை சார்ந்ததாக மாற வேண்டும் என்றும், வேலை என்பது சம்பளம் சார்ந்ததாக இல்லாமல் திறன் சார்ந்ததாக மாற வேண்டும் என்றும், பெற்ற தாய் போல் மாணவர்கள், இளைஞர்கள் நலனில் அக்கறை கொண்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
மிக முக்கியமாக, “ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உள்ள புறத்தடைகளை உடைக்க வேண்டும் என்பதே 'நான் முதல்வன்' திட்டத்தின் நோக்கம்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.