தஞ்சை மாவட்டத்தில் மேலும் 13 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, சக மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சற்று வேகம் எடுக்கத் தொடங்கியிருக்கும் கொரோனாவின் 2 வது அலையானது, சென்னைக்கு அடுத்தப்படியக தஞ்சாவூர் மாவட்டத்தில் மையம் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே, தொடர்ந்து பரவி வருகிறது.

இதில், தமிழகம் முழுவதும் நேற்யை தினம் மட்டும் 1385 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதில், 1382 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 3 பேர் மட்டும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தமிழக சுகாதாரத் துறை கூறியுள்ளது. 

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,42,115 ஆக அதிகரித்து உள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையானது, தற்போது 8,68,367 ஆக அதிகரித்து உள்ளது.

அத்துடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தற்போது 8619 ஆக அதிகரித்து இருக்கிறது. 

தமிழகத்தில் நேற்யை தினம் 659 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 8,47,139 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நேற்று மட்டும் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது அரசு மருத்துவமனையில் 5 பேரும், தனியார் மருத்துவமனையில் 5 பேர் என்று, மொத்தம் 10 நேற்றைய தினம் உயிரிழந்து உள்ளனர். இதனால், தமிழகத்தில் இது வரை கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் மொத்த பலி எண்ணிக்கையானது 12,609 ஆக அதிகரித்து உள்ளது.

இப்படியான சூழ்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் ஏற்கெனவே 11 பள்ளிகளில் 168 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்றைய தினம் மேலும் 17 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளதால், மொத்த பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 185 ஆக உயர்ந்து இருந்தது. 

இந்த நிலையில், தற்போது கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலும் 5 மாணாக்கர்களுக்கு கொரோனா 

தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்லூரியில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து உள்ளது.

அத்துடன், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை கல்லூரியில் ஒரு மாணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அருகில் உள்ள கல்லூரி மாணவர்கள் உட்பட 63 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. இதில், 8 மாணவர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதன் மூலமாக, கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையானது தற்போது 23 ஆக அதிகரித்து உள்ளது. இதனால், சக கல்லூரி மாணவர்கள் கொரோனா பீதிக்கு ஆளாகி உள்ளனர்.