கோவையில் பாலியல் தொந்தரவால் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை வேண்டும் என அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில் வசித்துவந்த 17 வயது மாணவி, ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையில் வீட்டில் தனியாக இருந்த மாணவி, நேற்று முன்தினம் அறையிலுள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு நடத்திய விசாரணையில், அதாவது தற்கொலை செய்து கொண்ட மாணவி, மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் சேருவதற்கு முன்னதாக, சின்மயா வித்யாலயா பள்ளியில் படித்தபோது, அவருக்கு மிதுன் சக்ரவர்த்தி என்ற இயற்பியல் ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 

c1

வேறு பள்ளிக்கு மாறியும், ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி தொந்தரவு செய்ததால் மாணவி மனம் உடைந்து போனதாக தெரிகிறது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அந்த மாணவி எழுதியுள்ள கடிதத்தில், ''யாரையும் சும்மாவிடக் கூடாது. ரீத்தாவோட தாத்தா, எலிசா சாருவோட அப்பா, இந்த சார் யாரையும் விடக் கூடாது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை வேண்டும் என அரசியல் தலைவர்கள் முதல் பலரும் வலியுறுத்தியுள்ளனர். 

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''பாலியல் தொல்லையால் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அவரது மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். வேலியே பயிரை மேயும் அவலத்திற்குத் தமிழகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் தூத்துக்குடி நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஆசிரியர் கொடுத்த, பாலியல் தொல்லைக் காரணமாகக் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பதற வைக்கிறது. 

தனக்கு நேர்ந்த தொடர் பாலியல் தொல்லை பற்றி பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் குரலுக்குச் செவி கொடுத்திருந்தால், குற்றம் நிகழ்வதைத் தக்க நேரத்தில் தடுத்திருக்க முடியும்'' என்று பதிவிட்டுள்ளார்.

c2

கோவை மாணவியின் சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ''கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி ஆசிரியர் கொடுத்தப் பாலியல் தொந்தரவினால் தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப் போனேன். 

அண்மைக்காலமாக வெளிப்பட்டு வரும் கல்விக்கூடங்களில் நடைபெற்று வரும் பாலியல் கொடுமைகள் தொடர்பான செய்திகள் பெண் பிள்ளைகளின் நல்வாழ்வு, அவர்களது சமூகப் பாதுகாப்பு குறித்த பெருங்கவலையை ஏற்படுத்துகின்றன.

மாணவியின் தற்கொலைக்குக் காரணமான கோவை சின்மயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டது சற்றே ஆறுதலைத் தந்தாலும், அக்கொடுங்கோலனைச் சட்டத்தின் பிடியிலிருந்தும், தண்டனையிலிருந்தும் தப்பிக்கவிடாது.

இனி எவருக்கும் இத்தகைய எண்ணமே எழாதவாறு தடுக்கும் வகையில் மிகக் கடுமையான தண்டனை உறுதி செய்ய வேண்டுமெனவும், மாணவியின் மீதே பழிசுமத்தி அப்பிஞ்சை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, இளந்தளிர் கருகுவதற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்'' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.