“இந்து அறநிலையத்துறை அமைச்சகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? ஆர்.எஸ்.எஸ்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளதா?” என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உத்தரகாண்டின் கேதர்நாத்தில் நடைபெற்ற மத நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றதையும், ஆதி சங்கரர் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றியதையும் தமிழகத்திலுள்ள திருவரங்கம் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆகியவற்றில் திரையிட்டு ஒளிபரப்பிய பாஜகவினர் செயல்பாடு அதிர்ச்சி அளிக்கிறது” என்றும், குறிப்பிட்டு உள்ளார். 

“அரசியல் மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட பொதுத் தளங்களாக விளங்கும் கோயில்களை மத வெறி அரசியலுக்கும், கட்சியின் வேர்பரப்பலுக்கும், தன்னலச் செயல்பாடுகளுக்கும் பாஜகவினர் பயன்படுத்த முனைவது வன்மையான கண்டனத்திற்குறியது” என்றும், சீமான் கண்டித்து உள்ளார்.

அத்துடன், “தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பிரதமர் மோடியின் மதம் சார்ந்த நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்ய யார் அனுமதித்தது? என்றும், அத்து மீறிக் கோயிலுக்குள் உள் நுழைந்து பாஜகவினர் திரையிட்ட போதும் அதனைத் தடுக்காது காவல் துறை என்ன செய்ததென்று புரியவில்லை?” என்றும், சீமான் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.

மேலும், “இத்தகையச் செயல்களில் ஈடுபட்ட பாஜகவினர் மீது இது வரை எவ்வித வழக்கும் தொடுக்காது திமுக அரசு அமைதிகாப்பது வெட்கக்கேடானது” என்றும், சீமான் மிக கடுமையாக விமர்சித்து உள்ளார்.

“கோயில்களும், வழிபாட்டுத் தலங்களும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய மதப் பரப்புரைக் கூடங்களாக மாறுமென்றால், இந்து அறநிலையத் துறை அமைச்சகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது ஆர்.எஸ்.எஸ்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளதா? எனும் கேள்விக்கு என்ன பதிலுண்டு” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“பாஜகவை வன்மையாக எதிர்ப்பதாகக் கூறி, மக்கள் மன்றத்தில் பரப்புரை செய்து வாக்கு வேட்டையாடிய திமுக, தற்போது அதிகாரமிருந்தும் எதிர்ப்புணர்வைக் காட்டாது சமரசம் செய்வது ஆரிய அடிவருடித்தனமாகும்” என்றும், திமுகவை மிக கடுமையாக சீமான் விதர்சித்து உள்ளார்.

“எனும், இனி மேலாவது பாஜகவின் மதவாத செயல்பாடுகளுக்குத் துணை போகாது, கோயில்களில் மத நிகழ்வுகளை ஒளிபரப்பிய பாஜகவினர் மீதும், அதற்குத் துணை போன அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்றும், சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.