சென்னை உயர் நீதிமன்ற  தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பதவி வகித்த சஞ்ஜிப் பானர்ஜி, கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். இந்நிலையில், இவரை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. 

உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், நேற்று உத்தரவிட்டார். இதுதான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வரும் 2023-ம் ஆண்டு, நவம்பர் மாதம் வரை சஞ்ஜிப் பானர்ஜியின் பணிக்காலம் இருக்கிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம், 16-ம் தேதி உச்சநீதிமன்றக் கொலிஜியம் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற கொலிஜியம், சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப் பரிந்துரை செய்திருக்கிறது.

b1

மேலும், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி முனீஷ்வர் பண்டாரியை, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றவும் கொலிஜியம் பரிந்துரை செய்திருக்கிறது. புதிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் நீதிபதி முனீஷ்வர் பண்டாரி ராஜஸ்தானைச் சேர்ந்தவர். 

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பணியிடமாற்றத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் 237 பேர் கொலிஜியத்துக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

ஏனெனில், 75 நீதிபதிகள் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான சஞ்ஜிப் பானர்ஜியை, 3 நீதிபதிகள் கொண்ட மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ஒருவர் மேகாலயா உயர்நீதிமன்றம் போன்ற குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த நீதிமன்றத்துக்கு இடமாற்றல் செய்யப்படுவது இது முதல் முறை கிடையாது. 

b2

கடந்த 2018-ம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக விஜயா கமலேஷ் தஹில்ரமாணி பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த 2019-ம் ஆண்டு, விஜயா கமலேஷை மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மாற்றி, உச்சநீதிமன்ற கொலிஜியம் உத்தரவிட்டது. 

இந்தியாவின் மூத்த தலைமை நீதிபதிகளில் ஒருவரான விஜயா கமலேஷ், தன்னை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றியதை மறுபரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்ற கொலிஜியத்துக்குக் கோரிக்கை வைத்திருந்தார்.

விஜயா கமலேஷின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இதையடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பிவைத்தார். இவரை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

b3

இந்த நிலையில் அவரின் ராஜினாமா கடிதத்தைக் குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். இந்தச் சம்பவம் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக்குழு செயல்பாடு பற்றி கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன. 

தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் அதே போன்ற மற்றொரு சம்பவம் நடந்துகொண்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருக்கிறது. 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் அணி மாநில தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் பேட்டிளித்தார். அப்போது, ‘உச்சநீதிமன்ற கொலிஜிய நடைமுறை சரியானது, மாற்றக்கூடாது என்றும், அதில் தலையீடுவது என்பது நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகும்.

கொலிஜியத்திற்கு ஆதரவாக 574 பேர் கையெழுத்திட்டுள்ளதாகவும், கொலிஜிய முடிவில் மத்திய அரசும் கூட தலையிட முடியாது. மேகாலயாவும் இந்தியாவில் தான் உள்ளது என்பதை உணர்ந்து கொலிஜிய முடிவை ஏற்க வேண்டுமெனவும்’ கூறினார்.