சென்னை வேளச்சேரியில் சைக்கிளில் சென்ற பெண் மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து கடந்த 2 வாரங்களுக்கும் மேலாகக் கன மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை உட்பட பல்வேறு மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. 

இந்த கன மழையால் குளம், குட்டைகள், ஏரிகள் எல்லாம் நிரம்பிய நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு மகளிலும் மழை நீர் வீட்டிற்குள் வந்த நிகழ்வும் நடந்தது.

அத்துடன், இந்த கன மழையால், சென்னையின் பல்வேறு முக்கிய சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாக மாறிப்போய் காணப்படுகின்றன. 

இப்படியான சூழலில் தான், சென்னை வேளச்சேரியில் ஒரு வழிப்பாதை வழியாகச் சைக்கிளில் செல்ல முயன்ற பெண் மீது, ஒரு தனியார் ஆம்னி பேருந்து மோதி உள்ளது. இந்த விபத்தில், அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதாவது, வேளச்சேரி 100 அடி சாலையில் இயங்கி வரும் குருநானக் கல்லூரிக்கு அருகே பெண் ஒருவர் சைக்களில் சென்று கொண்டிருந்தார். அதுவும், அந்த சாலையானது ஒரு வழியாக அமைந்திருந்தது.

அப்போது, எதிர் திசையில் வந்த தனியார் ஆம்னி பேருந்து ஒன்று, மற்றொரு மக்கத்தில் வாகனங்கள் வருகிறதா என்று பார்த்துக்கொண்டே, திரும்பியிருக்கிறது.

அப்போது, அந்த ஒரு வழிப்பாதையில் சைக்கிளில் சென்று திரும்ப நின்ற அந்த பெண் மீது, அந்த தனியார் பேருந்து மோதியிருக்கிறது.

அதுவும், அந்தப் பேருந்தின் வலது பக்க சக்கரம் அந்த மீது ஏறி இறங்கி உள்ளது. இதில், அந்த பேருந்தின் டயரில் சிக்கிய அந்தப் பெண், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து, அங்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், உயிரிழந்த பெண்ணின் பெயர் சங்கீதா என்பதும், அவர் வீட்டு வேலை செய்து வந்ததும், தற்போது வீட்டு வேலையை முடித்துக்கொண்டு, தனது வீட்டிற்குத் திரும்பும் வழியில் அவர் பேருந்தில் சிக்கி உயிரிழந்து இருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து, சம்மந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசாரின் இந்த விசாரணையில், இந்த விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் அப்படியே பதிவாகி, தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.