அமெரிக்கா சென்றுவந்த வேகத்தில், தற்போது கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசனிடம் நலம் விசாரித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

kamal

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் சூழ்நிலையில் மக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி கட்டாயமாக செலுத்திக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளும் அதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தி வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து  தமிழகத்தில் கொரோனா  வைரஸ் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மெகா  தடுப்பூசி முகாம் மூலம் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தபட்டு வருகின்றன. வாரம் ஒருமுறை நடந்து வந்த மெகா  தடுப்பூசி முகாம் தற்போது வாரத்திற்கு இரு முறை நடத்தப்படுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார் .

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் 'House of Khaddar' என்ற பெயரில் பிரத்யேக ஆடை பிராண்டை உருவாக்கியுள்ளார். காதி ஆடைகளை மேற்கத்திய நாடுகளிலும் பிரபலமடைய செய்வற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அண்மையில் கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருந்தார். சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பிய கமலுக்கு இருமல் இருந்து வந்தது.

இந்நிலையில்  அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது என தெரிவித்துள்ளார்.

சென்னை போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும்  நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி 2 தவணையும் செலுத்தியுள்ளார். தடுப்பூசி செலுத்திக்கொண்டபோதும் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து தனியார்  மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கமல்ஹாசன் சுவாச பாதையில் தொற்று பாதிப்பு மற்றும் காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  நடிகர் ரஜினிகாந்த், போன் மூலம் கமலை தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்து உள்ளார். ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவருமே 80-களில்  முன்னணி நடிகர்களாக தங்களை நிலை நிறுத்தி கொண்டது ஒரே காலத்தில் தான். திரைத்துறையில் போட்டிகள் இருப்பினும் தற்போதுவரை இருவருமே நல்ல நண்பர்களாகவே உள்ளனர். இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் சமூகவலைத்தளங்களில்  கொரோனோவில் இருந்து விரைவில் மீண்டு வரவேண்டும் என  கடவுளிடம் வேண்டுகிறோம் என்று கமல்ஹாசனின் ரசிகர்கள் பலரும் பதிவிட்டுள்ளார்கள்.