யூட்யூப் சமையல் நிகழ்ச்சியின் பிரபலம் டாடி ஆறுமுகத்தின் மகன் கோபிநாத் பார் ஊழியரை தாக்கிய வழக்கில் தலைமறைவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

armugam

யூட்யூபில் பிரபலமான டாடி ஆறுமுகம் என்பவரின் மகன் கோபிநாத், இவர் தனது சித்தப்பா மகன் மற்றும் நண்பர்களுடன் உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்திவிட்டு தகராறில் ஈடுப்பட்டு உணவகத்தில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி உள்ளனர். இதனை தட்டிக்கேட்ட உணவக ஊழியர் ஜார்ஜஸ் சினாசை தாக்கியதாக பார் ஊழியர்கள் முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை பூர்வீகமாகக் கொண்டவர் பிரபல யூடியூப் சமையல் கலைஞர் டாடி ஆறுமுகம். இவர் அவரது மகன் கோபிநாத் ஆலோசனையில் துவங்கப்பட்ட வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். 46 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்டுள்ள இவர்களின் யூடியூப் சேனலின் மூலம் இன்று மாதம் பல லட்சங்களில் சம்பாதித்து கொண்டிருக்கின்றனர். அதே போல் டாடி ஆறுமுகம் என்ற பெயரில் புதுச்சேரியில் மட்டும் மூன்று இடங்களில் உணவகங்களை நடத்தி வருகிறார் கோபிநாத்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று கோபிநாத் அவரது நண்பர்கள் சிலருடன் புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள மதுக்கூடத்துடன் கூடிய ஹோட்டலுக்கு சென்றுள்ளார். இரவு 8 மணி அளவில் பப்புக்குள் நுழைந்தவர்கள் 11 மணி வரை மது அருந்தியுள்ளனர். அப்போது ஜார்ஜ் என்ற ஊழியரிடம் மேலும் மது கேட்டுள்ளனர். அதற்கு ஜார்ஜ் என்ற ஊழியர் 11 மணிக்கு மேல் மது விற்பதற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்து இருக்கிறார். போதையின் உச்சத்தில் இருந்த கோபிநாத், நான் யார் தெரியுமா? டாடி ஆறுமுகத்தின் மகன், எனக்கே சரக்கு இல்லையா? என்று கேட்டுள்ளார்.

அதிகமாக மது அருந்திய அவர்கள் உணவக ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தையால் பேசியும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோபிநாத்துக்கும் ஹோட்டல் ஊழியருக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டது. இந்த தகராறை அக்கம்பக்கம் இருந்தவர்கள் விலக்கியும் சிறிதும் அடங்காமல் கோபிநாத், ஜெயராம் மற்றும் தாமு ஆகிய மூவரும் கடுமையான ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஓட்டலில் உள்ள அனைத்து பொருட்களையும் சூறையாடி உள்ளனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார்,கோபிநாத்துடன் மது அருந்திய இரண்டு பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள டாடி ஆறுமுகத்தின் மகன் கோபிநாத்தை தேடி வருகின்றனர்.