சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரியை கவர்னர் ஆர்.என் ரவி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

chennai high court

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜி கடந்த நவம்பர் மாதம் மேகாலயா மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யபப்ட்டார். இதனை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டார். அலகாபாத் கோர்ட்டில் மூத்த நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவி ஏற்றார்.

மேலும் அவரை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு கொலீஜியம் முடிவு செய்தது. கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று பொறுப்பு நீதிபதியாக உள்ள முனீஸ்வர்நாத் பண்டாரியை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்தார்.  

இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரியை கவர்னர் ஆர்.என் ரவி இன்று காலை 10 மணியளவில் முறைப்படி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். மேலும், உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்ட அமைச்சர், டிஜிபி உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.