“தமிழகத்திலும் சட்டமன்றம் முடக்க நேரிடும்” என்று, தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடுப்பிடித்துக்கொண்டிருக்கிறது. 

இந்த சூழலில் தான், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலகவுண்டனூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி, “தேர்தல் பணிகளை அதிகாரிகள், போலீசார் நேர்மையாக செய்ய வேண்டும்” என்று, கேட்டுக்கொண்டார். 

அத்துடன், “ஆளும் கட்சி என்பதால், திமுகவிற்கு பயந்து அதிகாரிகள் செயல்பட கூடாது என்றும், இந்த தேர்தல் முறையாக நடத்தப்பட வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், “அப்படி நேர்மையாக தேர்தலை நடத்தாவிட்டால், நாங்கள் நடத்த வைப்போம்” என்றும், அவர் காட்டமாக பேசினார். 

மேலும், “பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு உள்ளது என்றும், ஆனால் திமுக தனது வாக்குறுதியில் கொடுத்த பெட்ரோல், டீசல் விலை குறைப்பை செய்யாமல், சம்பிரதாயத்திற்கு வெறும் 3 ரூபாயை மட்டும் பெட்ரோலுக்கு குறைத்து உள்ளனர்” என்றும், குற்றம்சாட்டினார். 

“திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும், மக்களை திமுக ஏமாற்றிவிட்டது” என்றும், அவர் குற்றம்சாட்டினார்.

குறிப்பாக, “அதிமுகவை எதிர்கொள்ளும் திராணி, திமுகவிற்கு இல்லை என்றும், இப்போது இருக்கும் திமுகவிற்கு அந்த பலம் இல்லை” என்றும், எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

முக்கியமாக, “தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும், மேற்கு வங்கத்தில் என்ன ஆனது? என்று பார்க்க வேண்டும்” என்றும், அவர் குறிப்பிட்டு பேசினார். 

மிக முக்கியமாக, “மேற்கு வங்கத்தில் ஆளுநர் அங்கு சட்ட சபையையே முடக்கி உள்ளார். அதே நிலை, தமிழ்நாட்டிலும் இதே போல் ஆட்சியில் தவறுகள் நடந்தாலும் ஆளுநர் சட்டசபையை முடக்கும் நிலை ஏற்படலாம் என்றும், அதே நிலைமை இங்கே தமிழ்நாட்டிலும் எதிர்காலத்திலும் நிலவும்” என்றும், தமிழக அரசசை எச்சரிக்கும் வகையில் பேசினார்.

மேலும், “திமுக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும், காரணம் ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் போது, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வருவது உறுதி” என்றும், எடப்பாடி பழனிச்சாமி சூளுரைத்தார்.

இப்படியாக, எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசை மிரட்டுல் வகையில் பேசியதற்கு பதிலடி கொடுத்த இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, “தமிழக சட்டசபையை முடக்க நினைக்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது” என்று, காட்டமாக பேசினார். 

முக்கியமாக, “அத்தைக்கு மீசை முளைகட்டும்; பிறகு சித்தப்பா என பெயர் வைக்கலாம்” என்றும், அவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தக்க பதிலடி கொடுத்தார்.

மேலும், “தமிழக சட்டசபையை முடக்குவது என ஈபிஎஸ்ஸின் பேசி உள்ளது, அதிமுகவின் அறியாமையை காட்டுகிறது என்றும், அதிமுகவின் ஆசையை மத்திய அரசுக்கு தனது பேச்சின் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தெரியப்படுத்தி உள்ளார்” என்றும், அவர் குற்றம்சாட்டினார். 

மிக முக்கியமாக, “தமிழக சட்டசபையை முடக்கினால்தான், அடுத்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என, அதிமுக எச்சரிக்கை விடுத்து உள்ளது” என்றும், திமுக அமைச்சர் சேகர்பாபு, அதிமுகவை மிக கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.