“மாநிலங்களில் ஆளுநர்களின் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக, எதிர்க்கட்சி முதல்வர்களின் மாநாட்டை விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பான சட்ட முன்வடிவினை ஆளுநர் ரவிக்கு, தமிழக அரசு அனுப்பி வைத்திருந்த நிலையில், அதனை தமிழக ஆளுநர் ரவி, தமிழக அரசுக்கே மீண்டும் திருப்பி அனுப்பினார். தமிழக ஆளுநர் ரவியின் இந்த நடவடிக்கையால், கடும் அதிர்ச்சியடைந்த தமிழக அரசு, “அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்கிற அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்ய” தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை அடுத்த நாளே கூட்டியது.

அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூடடி, நீட் விலக்கு மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டு, மீண்டும் ஆளுநர் ரவிக்கே திருப்பி அனுப்பி வைக்கப்படடது.

அதே போல் தான், மேற்கு வங்க மாநிலத்தில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் இடையே தொடர்ந்து மோதல்  போக்கே நிலவி வருகிறது.

இந்த மோதல் போக்கானது, அம்மாநிலத்தில் தொடர்ந்து கொண்டே வருவதால் “மேற்கு வங்க மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கான மசோதாக்களுக்கு அந்த மாநில ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதாகவும்” மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றம் சாட்டிக்கொண்டே வந்தார்.

“மாநிலத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதால், ஆளுநரை நீக்கக் வேண்டும்” என்று வலியுறுத்தி, கடந்த வாரம் அம்மாநில நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக, நேற்று முன் தினம் மாலை “அரசியல் நிர்ணய சட்ட பிரிவு 174 அடிப்படையில், மேற்கு வங்க சட்டப் பேரவை பிப்ரவரி 12 முதல் காலவரையின்றி மூடுவதாக” மேற்கு வங்க ஆளுநர் அறிவித்து உள்ளார். 

இது குறித்து ஆளுநர் ஜக்தீப் தன்கர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “அரசியலமைப்பின் 174 வது பிரிவின் (2) உட்பிரிவின் (a) உட்பிரிவின் மூலம் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநரான ஜக்தீப் தன்கர், மேற்கு வங்காள சட்டமன்றத்தை இதிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ஒத்திவைக்கிறேன்” என்று, அறிவித்து உள்ளார். இதனால், மேற்கு வங்க அரசு கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளது. 

மேற்கு வங்க சட்ட சபையை முடக்கிய அந்த மாநில ஆளுநரின் செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தார். 

இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தொலைபேசியில் பேசினார். 

அப்போது, பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநர்களின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து தன்னுடைய வேதனையை மம்தா பகிர்த்து கொண்டார். 

அதில், “மாநில உரிமைகளை காக்க திமுக எப்போதும் துணை நிற்கும் என்றும், விரைவில் எதிர்க்கட்சி முதல்வர்களின் கூட்டம் நடத்தப்படும்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு உறுதி அளித்தார்” என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன.

அதாவது, “பாஜக ஆளாத பிற மாநிலங்களில் ஆளுநர்கள் சட்ட வரம்புகளை மீறி செயல்படுவதாக” அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. 

குறிப்பாக, “இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதலமைச்சர்கள் ஒன்றுகூடிச் சந்திக்கலாம்” எனவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்து உள்ளார்.

முக்கியமாக, “மாநில சுயாட்சியை உயர்த்திப் பிடிப்பதில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள்ள உறுதிப்பாட்டினை நான் அவரிடம் வெளிப்படுத்தினேன்” என்று, தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எதிர்க்கட்சி முதலமைச்சர்களின் சந்திப்புக் கூட்டம் விரைவில் டெல்லிக்கு வெளியே நடைபெறும்” என்றும், அவர் தெரிவித்துள்ளது, பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Beloved Didi @MamataOfficial telephoned me to share her concern and anguish on the Constitutional overstepping and brazen misuse of power by the Governors of non-BJP ruled states. She suggested for a meeting of Opposition CMs. (1/2)

— M.K.Stalin (@mkstalin) February 13, 2022