வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள், மஞ்சள் ஆராய்ச்சி மையம் மற்றும் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

தமிழக அரசு  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தலைமைச் செயலகத்தில், வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜீனூரில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கரூர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் மற்றும் சிவகங்கை மாவட்டம் - செட்டிநாடு ஆகிய இடங்களில் புதிய வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் புதிய மஞ்சள் ஆராய்ச்சி மையம். கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழக வரலாற்றில் முதல்முறையாக, விவசாயப் பெருமக்களை அழைத்து, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்து வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை - உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றமும் செய்யப்பட்டது. 

மேலும் தமிழ்நாட்டில் தற்போதுள்ள நிகர சாகுபடிப் பரப்பினை உயர்த்தும் இலக்கினை அடைந்திடவும், வேளாண் பெருமக்களின் வருவாயினை பன்மடங்காக உயர்த்திடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.2021-22-ம் ஆண்டிற்கான வேளாண்மை உழவர் நலத்துறை  நிதிநிலை அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனூரில் 150 ஏக்கரில் தோட்டக்கலை கல்லூரி ஒன்று தொடங்கப்பட்டு, தோட்டக்கலை பயில ஆர்வமுள்ள மாணவர்களின் விருப்பம் நிறைவேற்றப்படும் என்றும், மஞ்சள் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக ஈரோடு மாவட்டம். பவானிசாகரில் மஞ்சள் பயிருக்கான ஆராய்ச்சி மையம் சுமார் 100 ஏக்கர் பரப்பில், அமைக்கப்படும் என்றும், கோயம்புத்தூர் - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில், ஏற்கெனவே இயங்கி வருகின்றன. 

அதனைத்தொடர்ந்து வேளாண்மைக்கான துறை மேம்படுத்தப்பட்டு. 'நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்' என பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.அதன்படி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ். கிருஷ்ணகிரி மாவட்டம். ஜீனூரில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம். ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் புதிய மஞ்சள் ஆராய்ச்சி மையம், கோயம்புத்தூர் - வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.2021-22ஆம் ஆண்டிற்கான வேளாண்மை - உழவர் நலத்துறை மானியக் கோரிக்கையில். வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி கரூர், நாகப்பட்டினம். சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் புதிய அரசு வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி, கரூர் மாவட்டம் -கரூர், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் மற்றும் சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு ஆகிய மூன்று இடங்களில் புதிய வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
 
இந்நிலையில் மேலும்  கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், இளம் அறிவியல்  வேளாண்மை மற்றும் இளம் அறிவியல் தோட்டக்கலை ஆகிய பட்டப்படிப்புகளில் இந்த கல்வியாண்டு முதல் தமிழ்வழிக் கல்வி பாடத்திட்டம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், குமுளூரில் உள்ள வேளாண்மைப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வேளாண்மைப் பொறியியல் பட்டயப்படிப்பு ஆகியவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கல்லூரிகளில் இக்கல்வியாண்டில் தலா 50 மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்றுள்ளது. இதன்மூலம், அதிகரித்து வரும் வேளாண் கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சிகளின் தேவை பூர்த்தி செய்யப்படுவதோடு. மாணவர்கள் மற்றும் வேளாண் பெருமக்களின் பயன்பாட்டிற்கு மிகவும் பேருதவியாக அமையும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.