ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான தேவையில்லாத யூகங்களை, வதந்திகளை பரப்ப வேண்டாம் என இந்திய விமானப்படை வேண்டுகோள் விடுத்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் முப்படை ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் விமானம் மூலம் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 12 இதர இராணுவ அதிகாரிகள் பயணம் செய்தனர்.

ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் ராணுவப்பயிற்சி கல்லூரி அருகில் மேல்குன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நஞ்சப்பசத்திரம் என்ற இடத்தில் வான் வெளியில் பறந்துகொண்டு இருந்தபோது திடீரென அருகில் இருந்த வனப்பகுதிக்குள் விழுந்து நொறுங்கி தீப்பற்றி விபத்துக்குள்ளானது.

IAF TAMIL NADU POLICE WARNING

இந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அவர்கள், அவரது மனைவி மற்றும் 11 இதர ராணுவ அதிகாரிகள் உயிரிழந்து விட்டனர். விமானத்தின் குரூப் கேப்டன் வருண்சிங் என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார். 

விபத்து தொடர்பாக தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 26 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. ஹெலிகாப்டரின் சிறப்பு அம்சங்களை சுட்டிக்காட்டி விபத்து தொடர்பாக பலரும் பலவிதமாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான தேவையில்லாத யூகங்களை, வதந்திகளை பரப்ப வேண்டாம் என இந்திய விமானப்படை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

TAMIL NADU POLICE WARNING IAF

ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் குறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  “குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்த முப்படை விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான விசாரணை விரைவாக முடிக்கப்பட்டு உண்மைகள் விரைவில் வெளிவரும். அதுவரை உயிரிழந்த ராணுவ வீரர்களின் கண்ணியத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையில், ஆதாரமற்ற யூகங்களை தவிர்க்கவும்” என விமானப்படை செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  “நீலகிரியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்களை சிலர் பரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வதந்திகளை பரப்புவோர் யார் என்பதை சைபர் க்ரைம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்” என காவல்துறை எச்சரித்துள்ளது.

IAF has constituted a tri-service Court of Inquiry to investigate the cause of the tragic helicopter accident on 08 Dec 21. The inquiry would be completed expeditiously & facts brought out. Till then, to respect the dignity of the deceased, uninformed speculation may be avoided.

— Indian Air Force (@IAF_MCC) December 10, 2021