ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினியை விடுவிக்கவும், கடைசி காலத்தில் மகளுடன் வாழ ஆசைப்படுவதாகவும் நளினியின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

nalini

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி 2018 செப்டம்பர் 11-ம் தேதி ஆளுனர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதன் மீது ஆளுனர் எந்த முடிவும் எடுக்காததால் தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும் தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி மனுதாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்றம் அளித்த பல்வேறு தீர்ப்புகளின்படி, நளினியின் மனு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது ஆளுநரின் செயல்பாடு உச்ச நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும் ஆளுநர் ஒப்புதல் இல்லாமலும் தண்டனைக் குறைப்பு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் நளினி தரப்பில் சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது. இதனையடுத்து  உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய நளினி தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், கூடுதல் பதில்மனுவை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்ததனர்.

இந்நிலையில் 31 ஆண்டுகள் சிறைவாசத்தால் மன அழுத்தம் உடல் உபாதைகளால் நளினி அவதிப்பட்டு வருகிறார். மனிதநேய அடிப்படையில் அவருக்கு பரோல் வழங்க வேண்டும் என்று நளினியின் தாயார் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். என் இறுதி காலத்திலாவது மகள் நளினி என்னுடன் வாழ ஏங்குகிறேன் என்று முதல்வரிடம் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் நளினியும் ஒருவர். 30 ஆண்டுகாலமாக 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும்  சிறையில் உள்ள நளினியை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று அவரது தாயார் பத்மா முதல்வர் தனிப் பிரிவில் மனு அளித்துள்ளார். அதில் வயது மூப்பின் காரணமாக உடல் மற்றும் உளவியல் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறேன். என் இறுதி காலத்திலாவது மகள் நளினி என்னுடன் வாழ ஏங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார். நளினி 31 ஆண்டுகள் சிறைவாசத்தால் மன அழுத்தம், உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறார். எனவே மனிதநேய அடிப்படையில் அவருக்கு பரோல் வழங்க வேண்டும். 7 பேர் விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அறிந்தேன். அதன்படி ஆளுநரிடம் தாங்கள் நினைவூட்டி விடுதலைக்கு ஆவன செய்ய கேட்டுக் கொள்கிறேன் என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். நளினியின் தாயாரின் கோரிக்கையை ஏற்று பரோல் வழங்க முதல்வர் உத்தரவிடுவாரா என்ற எதிர்பார்ப்பு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.